×

உள்ளாட்சி அமைப்புகளில் புதிய கட்டுமானங்களை தொடங்கும் வகையில் திட்ட அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம்: சிஎம்டிஏவுக்கு ஊரமைப்பு இயக்ககம் கடிதம்

சென்னை: கட்டுமான திட்ட அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம் வழங்கி, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் சந்திரசேகர் சாகமூரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில்  நாளுக்குநாள் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் புறநகர் தாண்டியும் பொதுமக்கள் வீடு கட்டி செல்லும் நிலை தான்  உள்ளது. இந்த நிலையில் தளபரப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொள்ள முடியும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது. இதையேற்று  கட்டிடங்களுக்கு வழங்கப்படும்  தளப்பரப்பு குறியீட்டை (எப்எஸ்ஐ) 1.5 லிருந்து 2.0 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

இதை தொடர்ந்து சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி, உள்ளாட்சி அமைப்புகளிடம் புதிய தளபரப்பு குறியீட்டின் அடிப்படையில் பலர் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால்,  கட்டுமான பணிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு அமல்படுத்தியுள்ள கூடுதல் தளப்பரப்புடன் கூடிய திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க ஏதுவாக வீட்டு வசதித்துறை சார்பில்  நகர் ஊரமைப்பு இயக்ககம், சிஎம்டிஏவிற்கு கடிதம் ஒன்றை எழுதி  அனுப்பியுள்ளது.

அதில் குடியிருப்பு கட்டிடங்கள் 9 மீ வரை உயரம் உள்ள 6 குடியிருப்புகள் கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது, 12 மீ உயரம்  வரை உள்ள 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு வரை கட்டப்படும் 16 குடியிருப்புகளுக்கு மிகாமல் கொண்ட தரைத்தளம்  மற்றும் இரண்டு தளங்கள் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் 3 தளங்கள், வணிக உபயோக கட்டிடங்கள் (12 மீட்டர்  உயரம் வைர) நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான கட்டிடங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகார பகிர்ந்தளிப்பின் அடிப்படையில் 18.3 மீட்டர் உயர் வரை தொடர்ந்து திட்ட அனுமதி வழங்கலாம். மேலும், மனை  உட்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி வழங்க தற்போழுது நடைமுறையில் உள்ள அதிகாரப் பகிர்ந்தளிப்பு தொடரும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரப்பகிர்வு
ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகார பகிர்வு வழங்க பல கோரிக்கைகள் வரப்பெற்றதை தொடர்ந்தும் உள்ளாட்சிகளுக்கு  ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வில் பகுதி மாற்றம் செய்து குடியிருப்பு கட்டிட உத்தேசங்களை பொறுத்து உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகிறது. அதன்படி குடியிருப்பு கட்டிடங்கள் 4000 சதுரஅடி தரைப்பரப்பு வரை, 4 குடியிருப்புகள் வரை கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் இரண்டு தளங்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது 7 ஆயிரம் சதுர அடி தரைப்பரப்பு வரை, 8 குடியிருப்புகள் வரை கொண்ட உயரத்திற்கு மிகாத தரைதளம் மற்றும் 2 தளங்கள் அல்லது வாகன நிறுத்தும் தளம் அல்லது 3 தளங்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

வணிக உபயோக கட்டிடங்களை பொறுத்தமட்டில் ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகார பகிர்ந்தளிப்பே தொடரும். மண்டல துணை இயக்குனர் தங்கள் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளையும் ஆய்வு செய்து வருடம் ஒருமுறை நகர் ஊரமைப்பு  இயக்குனருக்கு அறிக்ைக அனுப்ப வேண்டும்.  உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் அதிகார பகிர்வு மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆகியோரால் கண்காணிக்கப்பட வேண்டும் என்று நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் சந்திர சேகர் சாகமூரி அறிவுரை வழங்கியுள்ளார்.



Tags : commencement ,CMDA ,Directorate of Operations , Letter to Local Authorities, Authority, CMDA, Directive Directive
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...