×

சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் அபாயத்தை குறைக்க ஆய்வு: பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் ஒப்பந்தம்,.. தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்தில் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்காக பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் இணைந்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு  செய்துள்ளது. இந்திய அரசும், பிரிட்டிஷ் துணை தூதரகமும் இணைந்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் அபாயங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை  செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் பிரிட்டிஷ் துணை தூதர் ஆல்வின்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த காலங்களில் பேரிடர் மேலாண்மையானது நிவாரண பணிகளை சார்ந்தே இருந்தது. தற்போது பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பேரிடர் அபாயம் குறித்து மதிப்பீடு அபாய தகவல்  தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை, உடனடி அவசர கால மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது.

மேலும், இன்னும் பெரிய அளவில் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த கள ஆய்வு மேற்கொள்ள இந்திய அரசிற்கும், பிரிட்டிஷ் துணை தூதரகத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் பிரிட்டிஷ் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் ஆய்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வேகமாக குறைந்து வரும் இயற்கை வாழ்விடங்களை கொண்ட பெரிய கடலோர மற்றும் நகர்ப்புற  மக்களை கொண்ட நகரங்களான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகியவற்றில் பேரிடர் அபாய குறைப்பு மற்றும் தணிப்பை வலுப்படுத்த பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் இணைந்து அவர்களது தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட உள்ளது. எளிதில் பாதிக்கப்பட கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, உபரிநீர் ஊடுருவல் தடுப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் நீடித்த நிலையான நகரங்களுக்கான பொது பேரிடர் அபாய குறைப்பிற்கான நடைமுறைகளை  கையாளுதல் தொடர்பான தொழில்நுட்ப உதவி வழங்கி அதன்மூலம் பேரிடர் அபாயத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kanchipuram ,Chennai ,British ,consulate ,districts ,action Reduction ,Cuddalore ,Tamil Nadu Government ,Cuddalore Districts , Chennai, Kanchipuram, Cuddalore, British Embassy, Government of Tamil Nadu
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்