×

கொரியா ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி : சாய்னாவும் வெளியேறினார்

இன்ச்சியான்: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலக சாம்பியனான பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வன் ஸாங்குடன் (11வது ரேங்க்) நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் சிந்து அதிரடியாக விளையாடி 21-7 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் ஸாங்  கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் இழுபறியாக நீடித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்த செட்டை பெய்வன் ஸாங் 24-22 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. அதே வேகத்துடன் 3வது மற்றும் கடைசி செட்டிலும் சிறப்பாக விளையாடிய ஸாங் 7-21, 24-22, 21-15 என்ற செட்  கணக்கில் உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தினார்.

சாய்னா ஏமாற்றம்: மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் தென் கொரியாவின் கிம் கா இயுனுடன் மோதினார். முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் போராடி வென்ற சாய்னா, அடுத்த செட்டை 18-21  என்ற கணக்கில் இழந்தார். மூன்றாவது செட்டிலும் அவர் 1-8 என பின்தங்கிய நிலையில், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலும் இந்தியாவின் சாய் பிரனீத் 9-21, 7-11 என்ற கணக்கில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென்னுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக விலகினார். சிந்து, சாய்னா, பிரனீத் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்த நிலையில், மற்றொரு இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் தனது முதல் சுற்றில் 21-16, 21-16 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் லூ சியா ஹங்கை வீழ்த்தி ஆறுதல்  அளித்தார்.


Tags : Sindhu ,round ,Sindh , Korea Open Badminton, Indus, Saina
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...