×

தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும்: விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம்... அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விளக்கம்

சென்னை: தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும்; விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.டெக்- ஐ.டி இரண்டாம் ஆண்டில் இடம்பெற்றுள்ள Philosophy என்ற பாடத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கூறும் அறிவுரை, சமஸ்கிருத உபநிடதங்கள் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெற்றுள்ளன என கூறப்பட்டது.

மேலும், ரிக், யஜூர் உட்பட 4 வேதங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இது மாணவர்கள் மட்டுமின்றி கல்வியாளர் தரப்பிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தத்துவவியல் பாடத்திற்க்காக பகவத்கீதை சேர்க்கப்பட்டது குறித்து அண்ணா பல்கலைக்கழக துரைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். பகவத்கீதை உள்ள தத்துவவியல் பாடம் விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும். தத்துவவியல் பாடத்தை மாணவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

12 பாடங்கள் உள்ளடங்கிய விருப்பப்பாட பட்டியலில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பாடத்திட்ட மாற்றம் விரைவில் அமலுக்கு வரும். சம்ஸ்கிருதம், பகவத் கீதை கற்றுத்தர உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்று அவர் கூறியுள்ளார். அரசியல் காரணத்துக்காக மாணவர்கள் மீது எந்த பாடமும் திணிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Anna University ,Vice Chancellor , Philosophy, Bhagavad Gita, Anna University. , Vice-Chancellor Surappa
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது