×

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் அமைக்கப்படுமா?... கூடுதலாக 25 ரயில்கள் இயக்க வாய்ப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாசில் புதிய பிளாட்பாரம் அமைக்கும் பட்சத்தில், ரயில் நிலையத்தில் இட நெருக்கடி தீர்ந்து கூடுதலாக 25 ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். தென்னக ரயில்வேயில் அதிக வருமானமுள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. வருடத்துக்கு சுமார் ரூ.50 கோடி வருமானம் வரும், ஏ கிரேடு ரயில் நிலையமாகும். இங்கிருந்து தினசரி 11 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 10 பாசஞ்சர் ரயில்களும், 12 வாராந்திர ரயில்களுமாக மொத்தம் 66 ரயில்கள் வந்து செல்கின்றன. தற்போது நடைபெற்று வரும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - திருநெல்வேலி இரட்டை ரயில் பாதைகள் பணிகள் முடிவடைந்தால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது உள் கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. இதனால் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் இருந்து, வரும் ரயில்கள் ஒரு பிளாட்பாரம் வந்த பின் என்ஜின் மட்டும் மற்றொரு பிளாட்பாரம் வழியாக திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் 2 பிளாட்பாரங்களில் சுமார் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றது. கூடுதல் பிளாட்பாரம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக ஒரு ரயில் கூட விட முடியாத நிலையும் உள்ளது. இந்த குறையை போக்க சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்கனவே சரக்கு ரயில்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட பைபாஸ் ரயில்வே தண்டவாளத்தில் தற்பொழுது புதிதாக இரட்டை பாதை அமைக்கும் பொழுது 2 தண்டவாளங்கள் அமைத்து அங்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து செல்லும் கொல்லம் - மதுரை, குருவாயூர் - சென்னை, கொல்லம் - சென்னை ரயில்கள் மேற்படி பைபாஸ் புதிய பிளாட்பாரத்திலே நிறுத்தி செல்லலாம்.

இதற்கான திட்டம் ஏற்கனவே ரயில்வேயில் நிலுவையில் உள்ளது. தற்பொழுது சந்திப்பு ரயில் நிலையம் வராமல் செல்லும் ஹப்பா. பிலாஸ்பூர், இன்டர்சிட்டி ரயில்களை மேற்படி பைபாசிலே நிறுத்தி செல்லலாம். சந்திப்பு ரயில் நிலைய 1 ஏ பிளாட்பாரத்திலிருந்து எளிதில் பயணிகள் நடந்தே செல்லும் நிலையும் ஏற்படும். அங்கு புதிய மேம்பாலம் அமைத்தால் பைபாஸ் பயணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கை ஆகும். ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த வித அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க மாவட்ட தலைவரும், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான ராம் கூறுகையில், பைபாஸ் திட்டம் குறித்து கடந்த பல வருடமாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே அமைச்சரும், அதிகாரிகளும் இந்த இடத்தை பார்வையிட்டு பிளாட்பாரம் அமைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ரயில் பயணிகள் நலன் கருதி, தற்போது நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தோடு இதையும் சேர்த்து, பைபாசில் 2 பிளாட்பாரம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், நாகர்கோவிலில் இருந்து தினசரி கூடுதலாக 25 ரயில்கள் விட வாய்ப்புகள் உண்டு என்றார்.

மாஸ்டர் பிளான் திட்டம் என்னவானது?
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்கம் செய்யும் வகையில், மாஸ்டர் பிளான் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த திட்டத்தின் படி, தற்போது உள்ள 4 பிளாட்பாரத்திற்கு பதிலாக கூடுதலாக 5 பிளாட்பாரமும், 3 பிட் லைனுக்கு பதிலாக கூடுதலாக 5 பிட் லைனும், 3 ஸ்டெபிளிங் லைனுக்கு பதிலாக கூடுதலாக 9 ஸ்டேபிளிங் லைனும், கூடுதலாக ஒரு சண்டிங் நெக் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி ரயில் நிலையத்தின் பின்புறம் செல்கின்ற 4 வழிச்சாலையோடு ரயில் நிலையத்தை இணைக்கும் புதிய சாலையும் அமைக்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் உள்ளது என்பது வேதனைக்குரியதாகும்.

சுற்றுலா பயணிகள் கடும் அவதி
பிலாஸ்பூர், ஹப்பா ரயில்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் தான் நின்று செல்கின்றன. வட மாநிலங்களில் இருந்து இந்த ரயில்கள் மூலம் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள், டவுன் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல கடும் சிரமம் அடைகிறார்கள். போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், அதிகளவில் ஆட்டோ கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பைபாஸ் அமைக்கும் பட்சத்தில், இந்த ரயில்களும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கே வரும் வாய்ப்பு உள்ளதாக பயணிகள் சங்கத்தினர் கூறினர்.


Tags : railway station ,Nagercoil junction ,junction ,New Railway Station , Meet in Nagercoil, New Platform
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...