×

பஸ் பாஸ் பிரச்னையால் கண்டக்டர், மாணவர்கள் மோதல் அதிகரிப்பு: போக்குவரத்து கழகம் தீர்வு காணுமா?

நாகர்கோவில்: மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்காததால், கண்டக்டர்கள், மாணவர்கள் இடையே மோதல் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். பள்ளி திறந்து காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த பின்னரும், இன்னும் இந்த வருடத்துக்கான பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. ஸ்மார்ட் கார்டு வடிவிலான பஸ் பாஸ் வழங்குவதாக கூறி, இன்னும் பாஸ் வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் தாமதம் செய்து வருகிறது. பழைய பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பழைய பஸ் பாஸ் மூலமே மாணவர்கள் பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல இடங்களில் பஸ் பாஸ் பிரச்சினை காரணமாக மாணவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. மாணவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்கு மட்டும் பஸ் பாஸ் உண்டு. சில மாணவர்கள் கடந்த வருடம் ஒரு பகுதியில் இருந்து, இந்த முறை வேறொரு பகுதிக்கு மாறி இருக்கிறார்கள். அவர்களுக்கு பழைய முகவரியில் தான் பஸ் பாஸ் இருக்கும். ஆனால் அவர்கள் புதிய முகவரி உள்ள ஊருக்கு செல்ல கண்டக்டர்கள் அனுமதிப்பது இல்லை. பள்ளி அடையாள அட்டையை காண்பித்தாலும் கூட, டிக்கெட் எடுக்குமாறு கூறுகிறார்கள். இதனால் மாணவர்கள் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பழைய பஸ் பாஸ் செல்லும் என்று தமிழக அரசு சுற்றறிக்கையில் இருந்தாலும் கூட, கண்டக்டர்கள் சிலருக்கு இந்த தகவல் தெரிந்து இருந்தும், அவர்கள் டிக்கெட் கேட்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள். எனவே உடனடியாக புதிய பஸ் பாஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தலாம் என்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது போல், அனைத்து கண்டக்டர்களுக்கும் தெரியும் வகையில் பஸ் நிலையங்களில் இந்த அறிவிப்பை எழுதி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Bus Pass Problem Conductor ,Students Conflict Rise ,Transport Corporation , Bus pass problem, conductor, students clash
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பஸ்,...