×

தமிழக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: தொல்லியல் துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழக தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நவீன முறையில் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள திட்டம் குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்க கோரி மதுரை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுகளில் இருந்து கிடைக்க பெறுவதால் அதனை பாதுகாக்க தமிழக அரசு, தொல்லியல் துறையில், கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த 1790ம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் அகழாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட, பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் மைசூர் கல்வெட்டியல் மண்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இங்கு சுமார் 1 லட்சம் கல்வெட்டுகள் உள்ள நிலையில் அவற்றில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்மொழியோடு தொடர்புடையது என்றும், இதுவரை அதுபற்றிய தகவல்களை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடப்படவில்லை எனவும் கூறியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு மைசூர் கல்வெட்டியல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டபோது 1000க்கும் அதிகமான கல்வெட்டு சார்ந்த ஆவணங்கள் சிதைவடைந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது பர்ஸ்வநாதர் கோவிலில் இருந்த பழமையான கல்வெட்டுகள் உட்பட சுமார் 3 ஆயிரம் பழம்பொருள் திருடப்பட்டதோடு கள்ளச்சந்தைகளில் பழம்பொருள் விற்பனையும் அதிகரித்து வருவதால் கல்வெட்டுகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தொல்லியல் சின்னங்கள், தமிழ் கல்வெட்டுகள், அவற்றை  படியெடுத்த சான்றுகள் ஆகியவற்றை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, நவீன முறையில் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள திட்டம் ஆகியன குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Archaeological Department ,ICort Branch , Archeology Symbol, Defense, What is the action, Department of Archeology, Response, Icort Branch directive
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய...