×

இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும்: தமிழக, கேரள முதல்வர்கள் கூட்டாக பேட்டி

திருவனந்தபுரம்: இரு மாநில நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படும் என திருவனந்தபுரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நெய்யாறு உள்பட நதிநீர்  பிரச்னைகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக  பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த சுமூகத்  தீர்வும் ஏற்படவில்லை. இந்த  நிலையில் நதிநீர் பிரச்னைகளில் தீர்வு ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இரு மாநில முதல்வர்களும் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு மாநில முதல்வர்களும் கூட்டாக பேட்டியளித்தனர். பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம் 60 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது என பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரள மக்களும் தமிழக மக்களும், சகோதரர்களாக வாழ்கின்றனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் இரு மாநிலங்களிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டன. முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பங்கீடு குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் - ஆழியாறு நீரை பங்கிட 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து திட்டத்தை நிறைவேற்றும். கேரளாவுக்கு, தமிழகத்துக்கும் இடையே பிரச்சனையின்றி நீர்ப்பங்கீடை செய்ய இருமாநில தலைமை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். ஆனைமலையாறு, சிறுவாணி பிரச்சனை குறித்தும் இந்த குழு பேசி முடிவெடுக்கும். இரு மாநிலங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீர் பங்கீடு குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்.

Tags : committee ,chiefs ,Tamil Nadu ,Kerala , River Water Problem, 5-member team, Tamil Nadu, Kerala Chiefs
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்