×

தீப்பெட்டி வீடுகள்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜப்பான் எந்தளவுக்குத் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாகத் திகழ்கிறதோ, அதே அளவுக்கு அங்கே வாழ்கின்ற மக்கள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக அதன் தலைநகரம் டோக்கியோவில் தனிமைவாசிகளின் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன.

இப்போது அவர்களுக்கென்றே பிரத்யேகமாக தீப்பெட்டி வீடுகள் முளைத்திருக்கின்றன.‘‘முதல் முறையா இந்த அறையைப் பார்த்தபோது இது ஒரு பிளாட்னு நம்ப முடியல. அப்புறம் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டிடம் பேசினேன். இந்த அறை ஒரு அடுக்குமாடி குடியிருப்புதான்னு சொன்னார்...’’ என்கிறார் டோக்கியோவில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர்.

ஒவ்வொரு பிளாட்டும் அலமாரியின் அளவில்தான் இருக்கின்றது. பிளாட் என்று சொல்வதைக் காட்டிலும் அறை என்பது பொருத்தமாக இருக்கும்.
9 சதுர மீட்டர் பரப்பளவே உள்ள அந்த அறையில் ஒருவர் மட்டுமே வசிக்க முடியும். கைக்கு எட்டும் தூரத்தில் எல்லா பொருட்களையும் வைத்துக்கொள்ளலாம்.

டேபிள், சேர் என்று எதையும் உள்ளே வைக்க முடியாது. முக்கியமாக அப்படி இப்படி என்று புரண்டு படுக்க முடியாது. இங்கே வசிக்கும் பல இளைஞர்கள் நின்றுகொண்டே சாப்பிடுகிறார்கள். அறைக்குள் உட்கார்ந்து சாப்பிடுவதைவிட நின்றுகொண்டே சாப்பிடுவது வசதியாக இருக்கிறதாம். சிறியதாக இருந்தாலும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.

நமக்கு அத்தியாவசியமான பொருட்களை வைக்க சுவரில் சின்னச் சின்ன அலமாரிகள் இருக்கின்றன. ரயில் நிலையத்துக்கு அருகில் இருப்பது இதன் இன்னொரு சிறப்பு. ஆட்டோ லாக், குளிர்சாதன வசதி, இணைய வசதி உட்பட நவீன வசதிகள் எல்லாமே இந்தச் சிறு அறைக்குள் இருக்கின்றன. 80 ஆயிரம் யென்னுக்கும் குறைவான வாடகைதான் இளைஞர்கள் இங்கே குடிபோக முக்கிய காரணம்.

இதில் குடியிருப்பவர்கள் எல்லோரும் வேலை காரணமாக ஊரை விட்டு வந்தவர்கள். ‘ஸ்பிலட்டஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வடிவமைத்திருக்கிறது. டோக்கியோவில் மட்டும் 70 கட்டடங்களில் 1000 அறைகள் இதே மாதிரியுள்ளன. இங்கே வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் 20 - 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்

Tags : Firebox houses , Japan, matchbox houses
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...