×

ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் குயிலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன் (39). இந்த ஊர், தமிழகம், புதுச்சேரி எல்லையில் உள்ளது. மணிகண்டன் மீது 7 கொலை, 9 கொலை முயற்சி, 4 கடத்தல் மற்றும் கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. அதில் ஆரோவில் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவான மணிகண்டனை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இவனை பிடிக்க விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி, ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, மற்றும் எஸ்ஐ பிரகாஷ், பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து அவனை தேடினர்.

விசாரணையில், தாதா மணிகண்டன் அண்ணாநகர் மேற்கு விரிவு பி செக்டார் 4வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் நேற்று இரவு அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதிக்கு மாறு வேடத்தில் சென்று, மணிகண்டன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தனர். அந்த குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி பியூலா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் தங்கி இருந்தான். இதனையடுத்து போலீசார் வீட்டின் கதவை தட்டினர். அப்போது மணிகண்டன் கதவை திறந்து வெளியே வந்தான். வந்தது போலீஸ் என தெரிந்தவுடன் எஸ்ஐ பிரபுவை கத்தியால், மணிகண்டன் வெட்டினான். இதில் அவர் காயமடைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து எஸ்ஐ பிரகாஷ், மணிகண்டனை 2 முறை தனது துப்பாக்கியால் சுட்டார்.

இதில் மணிகண்டன் குண்டு காயங்களுடன் கீழே சுருண்டு விழுந்தான். தகவல் அறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த தாதா மணிகண்டன், எஸ்ஐ பிரபு ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த எஸ்ஐ பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : encounter ,Rowdy Manikandan ,State Human Rights Commission Manikandan ,State Human Rights Commission ,Government , Rowdy Manikandan, Encounter, Tamil Nadu Government, State Human Rights Commission, Notice
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர்...