×

வாக்காளர் பட்டியலில் வாக்காளரே திருத்தம் செய்யும் தேர்தல் ஆணையம் செயலி: இந்தி, மலையாள மொழிகள் மட்டுமே உள்ளதால் தமிழக வாக்காளர்கள் அதிருப்தி

மதுரை: வாக்காளர் பட்டியலில் வாக்காளரே திருத்தம் செய்யும் தேர்தல் ஆணையம் ‘செயலி’யில் மாநில மொழிகளில் மலையாளம் மட்டுமே இடம்பெற்றுள்ளநிலையில் தமிழ் மொழி இல்லாததால் தமிழக வாக்காளர் அதிருப்தியடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை வாக்காளர்களே மேற்கொள்ளும் வகையில் சிறப்பு செயலி திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்திருந்தது.

கடந்த 1-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வாக்காளர்களே இந்த செயலியில் சென்று திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்து கொள்ள வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த காலஅவகாசம் நிறைவடையும் காலம் நெருங்கிவிட்டது. வாக்காளரால் பதிவு செய்யப்பட்ட இந்த திருத்த விவரங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட்ட விவரங்கள் ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவு பட்டியலில் வெளியிடப்படும்.

இந்நிலையில் இந்த வாக்காளர் திருத்தத்திற்காக அறிவிக்கப்பட்ட செயலியில் வாக்காளர் பட்டியில் திருத்த விவரங்களை மேற்கொள்வதற்காக வாக்காளர்கள், https://www.nvsp.in/Forms/Form8a என்ற லிங்கில் சென்றால் அவர்களுக்கான விருப்ப மொழியை தேர்ந்தெடுக்க வேண்டிய ஆஃப்சன் உள்ளது. அதில் இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மாநில மொழிகளில் மலையாளம் மட்டும் இடம்பெற்றுள்ளநிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் இடம்பெறவில்லை.

அதனால் வாக்காளர்கள் தங்கள் விருப்ப மொழியில் திருத்த விவரங்களை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். மலையாளம் மட்டும் இடம்பெற்றுள்ளநிலையில் தமிழ்மொழி இடம்பெறாதது தமிழக வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ரயில்வே வேலைகளிலும், ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவப்படிப்புகளிலும் தமிழகத்தில் வடமாநிலங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளதாக கூறும் தமிழக அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியலில் தங்கள் விருப்ப மொழியில் திருத்தம் செய்யும் தங்கள் உரிமை பறிக்கப்பட்டதை பற்றி வாய் திறக்காமல் உள்ளது எதனால் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூச்சுக்கு மூச்சு தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் இவர்களுக்கு இந்த விஷயம் தெரியவில்லையா? அல்லது அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு இந்த விவகாரம் சாதகமாக இல்லையா? என்று குரல் கொடுக்காமல் உள்ளார்களா? என்பது தெரியவில்லை. தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்காளர் விவர திருத்தம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியில், மலையாளத்தை போல் மற்ற மாநில மொழிகளையும் தேர்ந்தெடுக்கும் ஆஃப்சனையும் சேர்க்க வேண்டும். திருத்தம் செய்வதற்கான கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags : Voters ,Electoral Commission ,Tamil , Electoral rolls, voters
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...