பெங்களூருவில் உலகத் தரத்தில் ஆய்வு மையம் அமைக்கப்படும்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: பெங்களூருவில் உலகத் தரத்தில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த மையம் உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாடு சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம் இதுதொடர்பான அறிவிப்பை கூகுள் பார் இந்தியா மாநாட்டில் வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்படி சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், கூகுள் ஆய்வு இந்தியா என்ற பெயரில் பெங்களூருவில் புதிய மையத்தை அமைக்க உள்ளோம். இதன்படி கணினி அறிவியலில் நவீன தொழில்நுட்பங்களை ஆய்வு மேற்கொண்டு அதில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகள் புகுத்தப்படும். இதன் மூலம் விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாடு சார்ந்த பெரும் பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் ஜெய்யாக்னிக் இதுகுறித்துக் கூறும்போது, இந்தியாவின் அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கைகோத்து செயல்பட ஆசைப்படுகிறோம். இதன்மூலம் அதிக திறன் கொண்ட நபர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க முடியும். அறிவியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். கூகுளின் இந்த முன்னெடுப்பு மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>