×

சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து அக். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேனர் வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இதுவரை கைது செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக  சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது.

இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது  கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீ இறந்தார்.இதையடுத்து, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரிக்கக்கோரி வக்கீல்கள் லட்சுமிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி  ஆகியோர் விசாரித்து உயிர் பலி தமிழகத்தில் அவ்வளவு கேவலமாகிவிட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதற்கிடையே, சுபஸ்ரீ பலியான சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவிடக்கோரி   இளைய தலைமுறை அமைப்பைச் சேர்ந்த தமிழ் மணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில்  ஆஜரான வக்கீல் வாதிடும்போது, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதி, தவறு செய்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட போலீசார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு ஏற்கனவே இரு நீதிபதிகள்  அமர்வில் விசாரணையில் உள்ளது.

எனவே, பதில் தர ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் இன்று (புதன் கிழமை) பதில் தரவேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேசஷாயி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது கடந்த 2 வாரங்களாக காவல்துறை, மாநகராட்சி, ஆட்சியர் என யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி தனது வாதத்தை முன்வைத்தார். வழக்கு விசாரணையை டிஜிபி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் திமுக வாதத்தை முன்வைத்தது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீதிபதிகள் உத்தரவு விவரம்;

* பேனர் வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இதுவரை கைது செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* 2 உதவி ஆணையர்கள் மேற்கொள்ளும் விசாரணையை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும்.

* ஒட்டுமொத்த விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

* ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து அக். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Subba Sri, Jaya Gopal, Arrest, Report, High Court
× RELATED கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான...