×

வேலூர் அருகே தந்தைக்கு தெரியாமல் பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்து நாடகமாடிய தாய் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்ற தாயால் இடைத்தரகர் மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை கணவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் மூன்றாவதாக முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் சிகிச்சைக்காக தருமபுரி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவி சத்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால் ஏதேதோ கூறி சத்யா மழுப்பியதால் சந்தேகமடைந்த அவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மனைவி சத்யா மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தையை பெங்களூரு ஜெய் நகர் பகுதியை சேர்ந்த ரஹமது சகிலா தம்பதியினருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தனது பெரியம்மா கீதாவின் ஆலோசனையின் பேரில் கவிதா எனும் இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு விரைந்த வாணியம்பாடி காவல்துறையினர் குழந்தையை மீட்டதோடு குழந்தையை வாங்கிய தம்பதியினர், இடைத்தரகர் கவிதா, தாய் சத்யா, அவரது பெரியம்மா கீதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்யா உட்பட இடைத்தரகர் கவிதா மூலம் வேறு ஏதேனும் குழந்தைகள் பணம் பெற்றுக்கொண்டு விற்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : childbirth ,Vellore ,Selling Childbirth , Vellore, child, Rs 1 lakh, sale, drama, mother arrested
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...