நியூயார்க்: குழந்தைத் திருமணத்தை எதிர்த்துச் செயல்பட்டு வரும் பாயல் ஜாங்கிட்டுக்கு நியூயார்க்கின் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சேஞ்ச் மேக்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. பாயல் ஜாங்கிட் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹின்ஸ்லா கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவர் தனக்கு நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் தனது கிராமத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். இவர் நோபல் பரிசுவென்ற கைலாஷ் சத்யார்த்தியின் குழந்தைகள் அமைப்பின் ஹின்ஸ்லா கிராமத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நியூயார்க்கில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக சேஞ்ச் மேக்கர் விருது பாயல் ஜாங்கிட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாயலுக்கு குழந்தைகள் உரிமை ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சத்யார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாயலது முயற்சியால் அவரது கிராமத்தில் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அவர் சேஞ்ச் மேக்கர் விருது பெறுவது பெருமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சேஞ்ச் மேக்கர் விருதுகள் சமூக நலன் சார்ந்து இயங்கி இலக்குகளை அடையும் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் இயக்கம்) திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு குளோபல் கோல் கீப்பர் எனும் விருதை பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.