×

கழிவு பொருட்களை கொட்டுவதால் திருக்கோவிலூர் பெரிய ஏரி மாசடையும் அவலம்: தொற்று நோய் பரவும் அபாயம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பெரிய ஏரியோரத்தில் கழிவுகளை கொட்டுவதால் ஏரி மாசடையும் அவலம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து சந்தப்பேட்டை செல்லும் வழியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் பத்தாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஏரி விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாவது பெரிய ஏரியாக உள்ளது. இந்த திருக்கோவிலூர் பெரிய ஏரியின் கரை வழியாக தேவியகரம், கச்சுவாக்குச்சான் ஆகிய கிராமங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் ஏரியின் இரு புறத்திலும் திருக்கோவிலூர் மார்க்கெட்டில் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் உள்ள உணவகம், காய்கனி மார்க்கெட் கழிவுகள், இறைச்சி கடை கழிவுகளை இந்த ஏரியின் ஓரத்தில் கொட்டப்படுவதால் ஏரி மாசடையும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு மாடுகள், பன்றிகள் வந்து மேய்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலத்தில் கொட்டப்படும் கழிவுகளால் தூர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் ஏரி நீர் மாசடைந்து அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் ஏரியில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : spilling ,Lake , Tirukovilur, Lake
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...