×

நாகையில் 80 சதவீதம் நேரடி நெல் விதைப்பு: விவசாயிகள் மும்முரம்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை, திருக்குவளை ஆகிய தாலுகா பகுதியில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 80 சதவீத விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதில் சம்பா நெல் ரகமான நீண்ட கால, மத்திய கால, குறுகிய கால நெல் ரகங்களான சி.ஆர்.1009, பி.பி.டி. என்ற பாப்பட்லா, ஏ.டீ.டி. 37, ஏ.டீ.டி. 42, ஏ.டீ.டி.45, ஐ.ஆர்.20, ஏ.எஸ்.டி. 16 போன்ற ரகங்களை நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். இவைகள் தற்போது கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழையில் நெல் விதைகள் முளைத்துள்ளது.

இந்நிலையில் நேரடி நெல் விதைப்பு என்பதால் களைகளும் நெல் விதையுடன் சேர்ந்து முளைத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நெல் முளைத்து 20 நாட்களுக்குள் களை கொல்லி தெளித்து களையை கட்டுப்படுத்தலாம். காலம் தவறினால் களைகளை ஆட்கள் கொண்டு எடுக்க வேண்டி வரும். ஆட்களை கொண்டு களையை எடுத்தால் சாகுபடி செலவு அதிகமாகும். இதனால் விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் களை கொல்லி மருந்து தெளித்து களையை கட்டுப்படுத்துவார்கள். தற்போது ஒரு ஏக்கக்கு வயலில் முளைத்துள்ள களையை கணக்கில் கொண்டு களை கொல்லி பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1,500க்கு மேல் செலவாகும். தற்போது வங்கி கடன்கள் இருக்கும் நிலையில், விவசாயிகள் கோடை உழவு, விதை வாங்குதல், விதை தெளித்தல் போன்ற செலவுகளை செய்துள்ள விவசாயிகள் களை கொல்லி மருந்து வாங்குதல், அதை அடித்தல் போன்ற பெரும் செலவுகளால் திணறி வருகின்றனர். தமிழக அரசு விவசாயிகளுக்கு களை கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து குறிப்பட்ட காலத்தில் தண்ணீர் திறக்காததால் இந்த ஆண்டும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சாம்பா சாகுபடி செய்துள்ளனர். ஒரே நேரத்தில் கோடை உழவு, விதை வாங்குதல் போன்ற செலவுகள் செய்த நிலையில், தற்போது களை கொல்லி அடிக்க வேண்டிய கால கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் களை கொல்லி மருந்து ஒரு ஏக்கருக்கு ரூ.1,500க்கு மேல் செலவு ஆவதால் விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். தமிழக அரசு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் களைகொல்லி மருந்து வழங்கிட வேண்டும். அரசு மானிய விலையில் களை கொல்லி மருந்து வழங்கினால் காலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயலில் உள்ள களையை கட்டுப்படுத்தலாம். உடன் விவசாயிகளுக்கு மானிய விலையில் களை கொல்லி மருந்து வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொருளாளர் புருஷோத்தமதாஸ் கூறுகையில், தற்போது சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் செய்யப்பட்டு மழையில் விதைகள் முளைத்து 15 நாள் பயிராக உள்ள நிலையில், தற்போது களை கொல்லி அடித்து களையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். தமிழக அரசு நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு மானிய விலையில் களை கொல்லி மருந்து வழங்கினால் தான் அனைத்து விவசாயிகளும் காலத்தில் களைகொல்லி மருந்து தெளித்து களையை கட்டுப்படுத்தி பயன் பெறுவார்கள். உடனே தமிழக அரசு நேரடி நெல் விதைப்பு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் களை கொல்லி மருந்து வழங்கிட வேண்டும் என்றார்.

Tags : seed sowing ,Naga ,Nagai ,Rice , Nagai, Rice
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா