×

தஞ்சையில் அரண்மனை கட்டுவதற்கு பயன்படுத்திய சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரம் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சையில் அரண்மனை கட்ட பயன்படுத்தப்பட்ட 500 கிலோ எடை கொண்ட சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். தஞ்சை அரண்மனை, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் ராமலிங்கவிலாச அரண்மனை ஆகியவை சுண்ணாம்பு காரை கொண்டு பூசப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருங்கல் கட்டிடங்களுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இருந்துள்ளன. இந்த செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்பு காரை பூசுவது நடைமுறையில் இருந்துள்ளது. சுண்ணாம்புடன் மணல் கலந்து அதை கருங்கல் சக்கரத்தில் அரைத்து சில நாட்கள் வைத்து இந்த காரை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சுண்ணாம்பு அரவை கருங்கல் சக்கரத்தை காளையை பூட்டியும், சில இடங்களில் மனிதர்களை கொண்டும் வட்டமாக சுற்றி சுண்ணாம்பு காரை அரைக்கப்படும். இந்த சுண்ணாம்பு காரை பசைதன்மை, பிடிப்புதன்மை அதிகம் கொண்டிருக்கும். தஞ்சை அரண்மனையில் சுண்ணாம்பு காரை தயாரிக்க பயன்படும் கருங்கல் சக்கரம் இருந்துள்ளது. இந்நிலையில் தஞ்சை அரண்மனை வடக்கு சுவர் ராணிவாய்க்கால் சந்து கழிவுநீர் செல்லக்கூடிய சாக்கடை அருகே கேட்பாரற்று பல ஆண்டுகளாக இந்த கருங்கல் சக்கரம் கிடந்துள்ளது.

இதை தொல்லியல் துறையினர் கண்டெடுத்து அரண்மனை தர்பார் மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். இந்த கருங்கல் சக்கரம் 500 கிலோ எடையும், 91 செ.மீ விட்டமும் கொண்டது. கருங்கல் சக்கரத்தை ராஜஸ்தான் மாநிலம் துந்லோடு எனும் இடத்தில் 1888ம் ஆண்டு வரையப்பட்டுள்ள ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தபோது இந்த கருங்கல் சக்கரம் சுண்ணாம்பு காரை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதை ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

Tags : palace ,Thanjavur Thanjavur , Thanjavur, limestone
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி