திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்: தோண்டத் தோண்ட வெளிவந்த பாலித்தீன் கழிவுகள் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. தென்னம்பாளையத்தில் உள்ள பழைய மீன் மார்க்கெட்டை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அஸ்திவாரத்துக்கான பணிகள் தொடங்கியபோது பல அடி ஆழத்துக்கு பாலித்தீன் கழிவுகள் படர்ந்திருப்பதைக் கண்டு மாநகராட்சி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்பட்ட பாலித்தீன் கழிவுகள், பல அடுக்குகளாக மண்ணில் பரவி உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசிப்பவர்கள் மீன் சந்தை அருகே குப்பை கொட்டினோம். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் மண்ணில் அழியாமல் அதன் தன்மையை பாலித்தீன் காண்பித்துக் கொண்டிருக்கிறது. மலைபோல் மண்ணில் தேங்கிய பாலித்தீன் கழிவை முறையாக அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடத்தை மாநகராட்சி கட்ட வேண்டும் என்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, நாம் பயன்படுத்திவந்த பாலித்தீன் பைகள் இந்த மண்ணில் அழிய 300 ஆண்டுகள் ஆகும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பாலித்தீன் குப்பை, மண்ணுக்கு அடியில் நிலத்தடிநீரை சேமிக்கவிடாமல் தடுக்கிறது. மண்ணின் வளம் கெடுவதுடன், நிலத்தடி நீரையும் கெடுக்கிறது என்றார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவி செயற்பொறியாளர் கூறுகையில், பாலித்தீன் கழிவுகளை அகற்றி கட்டிடம் கட்டுவது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

Related Stories:

>