×

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் நியூயார்க்கில் நேற்று தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபர் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப் உங்கள் கேள்விகள் ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது என்று கூறினார். பின்னர் அந்த நிருபரை நோக்கிய ட்ரம்ப், நீங்கள் இம்ரான் கான் அணியைச் சேர்ந்தவரா? நீங்கள் கேள்வி கேட்கவில்லை. உங்கள் கருத்தை சொல்கிறீர்கள் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அந்த பத்திரிகையாளர், நான் இம்ரான் கான் அணியில் உறுப்பினராக இல்லை ஆனால் ஒரு சுதந்திரமான பத்திரிகையாளராக இருக்கிறேன். நான் எனது கேள்வியை முடிக்கிறேன் என்றுகூறி கேள்விகளை முன்வைத்தார். அப்போது அந்த நிருபரின் சில கேள்விகளுக்கு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். பின்னர் அந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க முயன்றார். அப்போது குறுக்கிட்ட டொனால்டு ட்ரம்ப், மிகச் சிறிய ஒரு வினாடி அறிக்கையாக கொடுங்கள் என்று கிண்டலாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த பத்திரிகையாளர் காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் பார்வையை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது இம்ரான் கானை நோக்கி திரும்பிய ட்ரம்ப், இது போன்ற பத்திரிகையாளரை நீங்கள் எங்கே கண்டுபிடித்தீர்கள்? என கிண்டலாக கூறியுள்ளார். இதனால் அந்த கூட்ட அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இதனால் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது குழுவினருக்கு அங்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Donald Trump ,New York ,Imran Khan ,US ,journalists ,Pakistani , New York, US President Donald Trump, Pakistan Prime Minister Imrankan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு