×

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும்: சீனாவால் 60,000 தொழிற்சாலைகள் மூடல்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் டிரம்ப் பேச்சு

நியூயார்க்: சீனாவால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். ஐநா.வின் 74வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 7 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை  நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஹூஸ்டன் நகரில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நேற்று முன்தினம் ஐநா.வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். நேற்று ஐநா பொதுச்சபை  கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தொடர்ந்து, ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ``தனது குடிமக்களை பாதுகாத்து, அண்டை நாடுகளை மதித்து, மற்ற நாடுகளின் கருத்துகளை மதிக்கும் சுதந்திரமான. இறையாண்மைமிக்க நாடுகளுக்கு இனிமேல் எதிர்காலம்   சொந்தமானது. தன் நாட்டை கவனிக்காமல், உலகத்தை பற்றி நினைப்பவர்களுக்கு எதிர்காலம் கிடையாது. தனது நாட்டை பற்றி மட்டுமே நினைக்கும் தேசப்பக்தர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது,’’ என்றார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என்றும் அறிவித்தார். டிரம்ப் தமது பேச்சின்போது, சர்வதேச பிரச்சினைகள் குறித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம்  அமைய தமது அரசு பாடுபட்டு வருவதாகவும் தாலிபன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு செய்வதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். ஆப்கானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து  நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை அந்நாடு மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். 40 ஆண்டுகளாக உலகம் ஈரான் ஆட்சியாளர்கள் சொன்ன பேச்சுகளை கேட்டு விட்டது என்றும் இதனால்  பெரும் பிரச்சினைகள் எழுந்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின்னர் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். உலகின் பல நாடுகளிலும்  சீனப்பொருட்களால் உள்நாட்டு தொழில்கள் நலிவடைந்திருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

சீர்திருத்தம் செய்வதாக சொன்ன வாக்குறுதிகளை கைவிட்ட சீனா , பணம் கையாளுதல், அறிவுசார் திருட்டு, தரமற்ற பொருட்களை குவிப்பது, தொழில்நுட்பத்தை அபகரித்தல் போன்ற பல்வேறு செயல்களால் சர்வதேச சந்தைகளை ஆட்டிப்  படைத்துக் கொண்டிருப்பதாக டிரம்ப் சாடினார்.

Tags : Iran ,Trump ,UN General Assembly ,China ,factories ,US , US sanctions on Iran continue: China closes 60,000 factories: Trump talks at UN General Assembly
× RELATED அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில்...