×

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போலீசார் இல்லாததால் தொடர் திருட்டு: நோயாளிகள், ஊழியர்கள் அவதி

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளின் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருந்தாளுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்களின் செல்போன், பணம் மற்றும் உடமைகள் அடிக்கடி திருடு போகிறது.பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அந்த வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தொடர்ந்து புகார்கள் வந்ததால், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, வயதான முதியவர் ஒருவர், மருத்துவமனை வந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறையில் இருந்து பணம், செல்போன் மற்றும் உடமைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறுவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த முதியவரை அடையாளம் கண்டு ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முதியவர் கடந்த 2 நாட்களுக்கு முன், மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு பணியில் இருந்து செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அடையாளம் கண்டு அவரை பிடித்து விசாரித்தபோது மயக்கம் ஏற்பட்டது போல் மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு 2 மணிநேரம் ஆகியும் மயக்கம் தெளியாதது போல் அப்படியே கிடந்துள்ளார்.இதுபற்றி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க சென்றபோது, அங்கு போலீசார் இல்லாததால் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயக்க நிலையில் கிடந்த முதியவரை பார்த்து இவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இதனால், அந்த முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் விடுவித்தனர். எனவே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போதிய போலீசாரை நியமிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Theft ,Children's Hospital ,Egmore ,The Children's Hospital , Children's Hospital, Egmore,, Patients , staff
× RELATED எழும்பூர் குழந்தைகள் நல...