×

குவைத் வேலைக்கு சென்றபோது இருட்டறையில் அடைத்து சித்ரவதை: தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி

சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு உணவ, குடிநீர் தராமல் சித்தரவதை செய்ததாக அங்கிருந்து சென்னை திரும்பிய பெண் கூறினார்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி (35). இவருடைய கணவர் கூலிவேலை செய்பவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வறுமை காரணமாக  வெளிநாட்டுக்கு வீட்டு வேலை செய்ய ஏஜென்ட்டுகளை அணுகினார். அவர்கள் மாதம் ரூ28,000 சம்பளம். உணவு, தங்கும் இடம் இலவசம். ஒரு நாளைக்கு 10 மணிநேரம் மட்டுமே வேலை ஆண்டுக்கு ஒருமாதம் சம்பளத்துடன் விடுமுறை என்றதால் வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி லிங்கேஸ்வரி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையிலிருந்து விமானம் மூலம் குவைத் சென்றார். குவைத் விமான நிலையத்தில் லிங்கேஸ்வரியை இரண்டு ஏஜெண்டுகள் வரவேற்று அவர்களது அலுவலகத்திற்கு  ஒரு நாள் முழுவதும் தங்கவைத்தனர். மறுநாள் அங்குள்ள அரபு ஷேக் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஷேக் வீட்டில் ஏஜெண்ட்டுகள் ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. முதல்வாரம் அந்த ஷேக் வீட்டில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை தரப்பட்டது. அந்த வேலையும் அவருக்கு சுலபமாகவே இருந்தது. நாட்கள் ஆக ஆக வேலை மிகவும் கடுமையானது. காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணிவரை வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு சரியான உணவும் கிடையாது. குடிக்க தண்ணீர் கூட சரிவர கொடுப்பதில்லை. அவர்கள் சொல்லும் வேலையை சரியாக செய்யாவிட்டால் அடி, உதை இரும்புக் கம்பியால் சூடு போடுவது இருட்டு அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவது போன்ற பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்தார் லிங்கேஸ்வரி.

ஒரே ஒரு மாதம் மட்டுமே அவரது வீட்டிற்கு சம்பளம் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பின்பு அடுத்த சில மாதங்கள் சம்பளமும் அனுப்பவில்லை. மேலும் உன்னை நாங்கள் ரூ.2 லட்சத்துக்கு அடிமையாக வாங்கியுள்ளோம். என்றனர். லிங்கேஸ்வரி, அந்த வீட்டில் வேலை செய்ய மறுத்தார். மேலும் அவர் ஏஜெண்ட் அலுவலகத்தில் முறையிட்டார், ஆனாலும் அவர்கள் லிங்கேஸ்வரையை அடித்து உதைத்தனர். மற்றொரு வீட்டில் வேலைக்கு விட்டனர். அங்கும் கொடுமையாக இருந்ததால் அவர் தப்பி ஏஜென்ட்டுகளிடம் வந்தார். அவர்கள் அவரை கடுமையாக தாக்கி இருட்டறையில் அடைத்துவைத்தனர். சில தினங்கள் பட்டினி போட்டனர். அதோடு அவரை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினர். இதை அங்கு வேலைக்கு இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பெண் பார்த்துவிட்டு லிங்கேஸ்வரியை புகைப்படம் எடுத்து இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தபெண் கொத்தடிமையாக வாழ்வதற்கு போராடுவதாக முகநூலில் பதிவு செய்தார். அதை மும்பையில் உள்ள தமிழக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கீரன் வெங்கட்மதி, என்பவர் பார்த்துவிட்டு லிங்க்கேஸ்வரியை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார், அதற்காக குவைத்தில் உள்ள இந்திய துதரக அதிகாரிகள் உதவியுடன் லிங்கேஸ்வரியை கடந்த சில தினங்களுக்கு முன்பு மீட்டு இந்திய தூதரக அலுவலகத்தில் தங்க வைத்தனர். பின்பு அவரை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால் விமான டிக்கெட் யார் எடுத்து அனுப்புவது என்ற பிரச்னை ஏற்பட்டது.

குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் உதவியுடன் சமூக ஆர்வலர் கிரன் வெங்கட்மதி, லிங்கேஸ்வரிக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்தார். நேற்று பகல் 12.50 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் லிங்கேஸ்வரி சென்னை வந்து சேர்ந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில்  தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்று அழைத்து அவருக்கு மாற்று உடை உணவு வழங்கி அவரது சொந்த வூரான ராமநாதபுரம் செல்ல பஸ் டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து அனுப்பினர்.முன்னதாக லிங்கேஸ்வரி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:  என் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு கனவுகளுடன் வெளி நாட்டுக்கு சென்றேன். ஆனால் இந்த பத்து மாதத்தில் அனுபவித்த கொடுமைகள் எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற கொடுமைகள் நேரக்கூடாது. என்னை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப ரூ.2 லட்சம் கேட்டனர். விவசாயியான என் தந்தை முதலில் ரூ.50,000 அதன் பிறகு ரூ.1 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியும் அனுப்ப மறுத்துவிட்டனர், கொலை செய்து உடலை கடலில் வீசிவிடுவோம் என்றனர். ஆனால் அந்த ஆந்திரப்பெண் என்னைப்பற்றி முகநூலில் போட்டதை பார்த்து விட்டு குவைத்தில் உள்ள தன் ஆர்வலர் தான் என்னை உயிருடன் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். ஆந்திர பெண்ணும் தன் ஆர்வலரும் இல்லாவிட்டால் நான் உயிருடன் திரும்பமுடியாது. எந்த ஒருபெண்ணும் வெளிநாட்டு வேலை மோகத்தில் வாழ்க்கையை சீரழித்துக்கொள்ள வேண்டாம். அதை விட இங்கே இருந்து சிறு சிறு வேலை செய்தாவது தங்களை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பெண்கள் என் வாழ்கையில் ஏற்பட்ட கொடுமையை முன் மாதிரியாக  எடுத்துக் கொள்ளவேண்டும். என்றார்.



Tags : Kuwait , Kuwait, Torture , dark, escaped woman
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...