×

விஜய் ஹசாரே கோப்பை தமிழ்நாடு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில்  தமிழ்நாடு தனது முதல் போட்டியில்  ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி  நேற்று  தொடங்கியது. அக்.16ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும்.  மொத்தம் 37 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. ஆளூரில்,  வதோராவில் நடைபெற இருந்த  7 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. ஜெய்பூரில் தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. தமிழ்நாடு பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் 15வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்தது.ஆனால் அடுத்து வந்த அசோக் மெனாரியா, அர்ஜித் குப்தா, ராகுல் சாஹர் ஆகியோர் சிறப்பாக விளையாட ராஜஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 261 என்ற  வலுவான எண்ணிக்கையை எட்டியது. தமிழக அணியின் விக்னேஷ் 3,  முகமது, சாய்கிஷார் தலா 2, நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணியின் ஜெகதீசன் 7 ரன்னில் வெளியேறினார். ஆனால் அடுத்த வந்த பாபா அபரஜித்துடன் இணை சேர்ந்த அபினவ் முகுந்த் அபாரமாக விளையாடினார். அவர் 83பந்துகளில் 75 ரன் எடுத்த போது கலீல்  அகமது பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது அணி 25.4 ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 126 ரன்னை எட்டியிருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாபா அபரஜித் 52 ரன்னிலும், ஹரி நிஷாந்த் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்த வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ஷாருக்கான் இணை அற்புதமாக விளையாடியது. அதனால் தமிழ்நாடு 48ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  தினேஷ் கார்த்திக்  52 பந்துகளில்  52 ரன்னும்,  ஷாருக்கான் 39 பந்துகளில் 48 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  ராஜஸ்தான் அணியின் அங்கித் சவுத்ரி, கலீல் அகமது, அபிமன்யூ லம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.புதிய பயிற்சியாளர் வாசு  பயிற்சியின் கீழ் தமிழ்நாடு முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல் விஜய் ஹசாரே தொடர்களில் ராஜஸ்தானை தொடர்ந்து தமிழ்நாடு வீழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.ஜெய்பூரில் நாளை நடைபெறும் போட்டி ஒன்றில் தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Vijay Hazare ,Tamil Nadu ,Vijay Hazare Cup , Vijay Hazare ,Cup, Tamil Nadu,6 wickets
× RELATED தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்...