×

மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வெங்காயம், பூண்டு விலை உயர்வு: தேர்தல் பிரச்னையாக உருவெடுக்கிறது

புனே: வரும் அக்டோபர் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வெங்காயம் மற்றும் பூண்டு விலை அதிகரிப்பு தேர்தல் பிரச்னையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மெட்ரோ நகரங்களிலும் வெங்காயம் மற்றும் பூண்டின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. மும்பை மற்றும் டெல்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் விலை 60ஐ தாண்டி விட்டது. அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்படும் நாசிக் மற்றும் புனே பகுதிகளில்கூட சில்லரை கடைகளில் வெங்காயம் விலை கிலோ 60க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் பூண்டு விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி விட்டது. தற்போது பூண்டு ஒரு கிலோ 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பூண்டு உற்பத்தி குறைவுதான். புதிதாக பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் வந்து சேரும் வரை அடுத்த இரண்டு மாதங்களில் வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை என்று விவசாய நிபுணர்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவிலும் தென் மாவட்டங்களிலும் பலத்த மழை காரணமாக வெங்காய பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். ‘மெட்டல்ஸ் மற்றும் மினரல்ஸ் டிரேடிங் கார்பரேஷன்’ ஏற்கனவே சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய டெண்டர் விட்டுள்ளது. இந்த இறக்குமதி சரக்கு நவம்பர் கடைசி வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாசிக் மாவட்டத்தின் லாசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் கமிட்டியின் இயக்குனர் ஜெய்தத்தா ஹோல்கர் இது குறித்து கூறுகையில், “வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்கிறது. லாசல்காவ் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு வரும் வெங்காயத்தின் அளவுக்கு சமமாக அரசு இறக்குமதி செய்கிறது. இந்த பிரச்னையில் அரசு ஏதோ செய்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆனால் வெங்காயம் விலை குறைய இந்த இறக்குமதி உதவாது” என்றார். லாசல்காவ் மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் குவிண்டால் வெங்காயம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Haryana Assembly Election ,Maharashtra , Maharashtra, Haryana poll venkayam cattapperavait, garlic
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...