×

மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு கட்டணம் குறைப்பு : பதிவாளர் தகவல்

வேலூர்: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். வேலூர் அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 140 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியல் கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென உயர்த்தியது. கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 5 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அரசின் ஒப்புதல் பெற்று கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புக்கான எழுத்துத்தேர்வு கட்டணம் ஒரு தாளுக்கு 100ல் இருந்து 90 ஆகவும், முதுகலை பட்டப்படிக்கு (எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யு, எம்.காம்) ஒரு தாளுக்கு 160ல் இருந்து 145 ஆகவும், எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்சி (ஐடி) ஆகியவற்றுக்கு ஒரு தாளுக்கு 500ல் இருந்து 450 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (3 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, ெஹச்சிஎம் நீங்கலாக ஒரு தேர்வுக்கு 175ல் இருந்து 150 ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு (6 மணி நேரம்) பி.எஸ்சி, ஹெச்.சி.எம் நீங்கலாக ஒரு தேர்வுக்கு 350ல் இருந்து 300 ஆகவும், பி.எஸ்சி, ஹெச்.சி.எம் படிப்புக்கான செய்முறை தேர்வு கட்டணம் ₹350ல் இருந்து 300 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ, எம்.எஸ்சி, எம்பிஏ, எம்.எஸ்.டபிள்யு முதுகலை படிப்புகளுக்கான செய்முறை தேர்வு (3 மணி நேரம்) 300ல் இருந்து 275 ஆகவும், எம்.எஸ்சி (6 மணி நேர செய்முறை தேர்வு) 600ல் இருந்து 500ஆகவும், எம்சிஏ (3 மணி நேர செய்முறை தேர்வு 400ல் இருந்து 350 ஆகவும், எம்எஸ்சி(ஐடி), சி.எஸ்.இ.எம் ஆகிய படிப்புக்கான 3 மணி நேர செய்முறை தேர்வு கட்டணம் 300ல் இருந்து 275 ஆகவும், எம்எஸ்சி அப்ளைடு மைக்ரோபயாலஜி செய்முறை தேர்வு கட்டணம் 1800ல் இருந்து 1600ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் 2019ல் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு வரும் 27ம் தேதிக்குள் அபராதத்தொகை இல்லாமல் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தலாம். வரும் 1ம் தேதி வரை அபராதத்தொகையுடன் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvalluvar University ,struggle , Reduction of selection fees, Thiruvalluvar University
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...