×

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பு 37 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு திரும்பிய நடராஜர்

* கல்லிடைக்குறிச்சியில் பக்தர்கள் கோலாகல வரவேற்பு

அம்பை: ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு இந்தியா கொண்டு வரப்பட்ட 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை நேற்று கல்லிடைக்குறிச்சி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு பின் வந்த நடராஜர் சிலைக்கு பக்தர்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில், 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையார் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1982 ஜூலை 5ம் தேதி  நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர் ஆகிய 4 சிலைகள் கொள்ளை போனது. இவற்றில் பிரதான சிலையான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து, கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வந்தனர்.

தமிழகம் கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி உத்தரவின்படி அங்கிருந்து தென்காசிக்கு கூடுதல் பாதுகாப்போடு எடுத்து வரப்பட்டது. நேற்று காலை 7.30 மணியளவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்போடு தென்காசியில் இருந்து நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர். அங்குள்ள கன்னடியன் கால்வாய் அருகே ஐயப்பன் கோயில் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் திரண்டு  பஞ்சவாத்தியங்கள் முழங்க வரவேற்றனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிலையை வைத்து அம்பை பிரதான சாலையில் பட்டாசுகள் வெடிக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட பன்னிரு திருமுறைகள் அடங்கிய பெட்டி முன்செல்ல, திருமுறைகளை படித்துக் கொண்டு சிவாச்சாரியார்கள் பின் சென்றனர். காலை 10.30 மணிக்கு நடராஜர் சிலை கோயிலுக்குள் கொண்டு சென்று ைவக்கப்பட்டது.

சிலை மீட்புக்கு தடை செய்தால் சிறை

சிறப்பு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறுகையில், அனைத்து கோயில்களிலும் விலை மதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க விக்ரகங்கள் பாதுகாப்பு அறை அமைக்க 25 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த கோயில்களிலும் அத்தகைய பாதுகாப்பு அறை அமைக்கப்படவில்லை. இக்கோயிலில் திருட்டு போன சிவகாமி அம்பாள் உள்ளிட்ட மற்ற 3 சிலைகளையும் விரைவில் மீட்போம். சிலைகளை மீட்பதில் இடையூறு ஏற்படுத்துவோர் சிறைக்குதான் செல்வர். இந்து சமய அறநிலையத் துறையில் 95 சதவீதம் பேர் நல்லவர்களாக உள்ளனர். 5 சதவீதம் பேர் செய்யும் தவறுகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்றார்.

Tags : recovery ,Australian Museum ,Temple , Natarajar returned, temple, 37 years , recovery , Australian Museum
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...