×

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கி நடவடிக்கை முடக்கம் 1,000 மட்டுமே எடுக்க மக்களுக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சி

மும்பை: மும்பையை தலைமையிடமாக கொண்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு (பி.எம்.சி. பாங்க்) 2019 செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து ஆறு மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த 6 மாதங்களுக்கு அந்த வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் அதிகபட்சம் ₹1,000 மட்டுமே தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.பி.எம்.சி. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் பி.எம்.சி. வங்கி நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில், செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து 6 மாதத்துக்கு வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 6 மாத காலத்தில் புதிய கடன்கள் வழங்கவோ, புதிய டெபாசிட்களை பெறவோ முடியாது. மேலும் புதிய முதலீடுகளை செய்யவும் அனுமதியில்லை. அதேவேளையில் டெர்ம் டெபாசிட் தொகை முதிர்வடையும் போது அந்த தொகையை அதே வாடிக்கையாளரின் பெயரில் மீண்டும் டெபாசிட்டாக ஏற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் சம்பளம், வாடகை, வரி, மின்சார கட்டணம், ஸ்டேஷனரி செலவுகள், சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் செலவுகளை செய்து கொள்ள பி.எம்.சி. வங்கிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி பி.எம்.சி. வங்கி கடன்கள் எதையும் வழங்கக்கூடாது என்றும் புதிய முதலீடுகளை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரிசர்வ் வங்கி விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகளை, வங்கியின் லைசென்ஸை ரத்து செய்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் வங்கி தொடர்ந்து தனது சேவைகளை நடத்தி வரும் என்றும் அறிக்கையொன்றில் ெதரிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப ரிசர்வ் வங்கி தனது உத்தரவுகளில் மாற்றம் செய்யக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நோட்டீஸ் நேற்று பி.எம்.சி. வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒட்டப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பி.எம்.சி. வங்கி நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் பெயரில் செல்போன்களில் செய்திகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த செய்தி வாடிக்கையாளர்களிடையே தீயாக பரவியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பி.எம்.சி. வங்கி கிளைகளில் குவிந்தனர்.

வெறும் 1,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற தகவல் அறிந்து பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஆயிரம் ரூபாயையும் எடுக்க வங்கி கிளைகளில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் வங்கி நிர்வாகத்துக்கு எதிராக வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை வங்கி ஊழியர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதனால், பெரும்பாலான பி.எம்.சி. வங்கி கிளைகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். லட்சக்கணக்கில் டெபாசிட் செய்த பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கடந்த 2019 மார்ச் மாதம் இறுதியில் பி.எம்.சி. வங்கியின் டெபாசிட்கள் மற்றும் அட்வான்ஸ்கள் முறையே 11,617 கோடி மற்றும் 8,383 கோடியாக இருந்தன. பி.எம்.சி. வங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இயங்கி வருகிறது. அதற்கு மொத்தம் 137 கிளைகள் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு நிர்வாகம் வேண்டுகோள்:
பி.எம்.சி. வங்கி நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தற்காலிகமானதுதான். வங்கியின் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டதற்கு நிர்வாக இயக்குனர் என்ற முறையில் நான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். 6 மாத இடைவெளிக்குள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு வங்கி மீண்டும் புதிய பலத்துடன் செயல்படும் என உறுதியளிக்கிறேன். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பத்தாவது பெரிய கூட்டுறவு வங்கி:
கடந்த 1984ம் ஆண்டு மும்பையில் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டதுதான் பி.எம்.சி. வங்கி. வேகமாக வளர்ந்த அந்த வங்கிக்கு தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 137 கிளைகள் உள்ளன. நாட்டின் பத்தாவது பெரிய கூட்டுறவு வங்கி என்ற பெருமையுடன் விளங்கி வந்தது பி.எம்.சி. வங்கி.

Tags : BMC Bank ,Mumbai ,Reserve Bank ,BMC ,bank headquarters , Mumbai, BMC Bank, Reserve Bank
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...