×

சென்னை கொரட்டூரில் பயங்கரம் பிரபல தாதா மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி கொரட்டூரில் தங்கி இருந்தபோது அவரை  போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசுக்கு சவாலாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கிய ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் குயிலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன் (39). இந்த ஊர், தமிழகம், புதுச்சேரி எல்லையில் உள்ளது. மணிகண்டன் மீது 7 கொலை, 9 கொலை முயற்சி, 4 கடத்தல் மற்றும் கொள்ளை, வழிப்பறி, உள்ளிட்ட 28 வழக்குகள் உள்ளன. அதில் ஆரோவில் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன. ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் உள்ளனர். அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான். தொழில் அதிபர்களை கடத்திபணம் பறித்து வந்தான். இவனது தம்பிகள் ஏழுமலை, ஆறுமுகம் ஆகியோரும் மணிகண்டனுடன் சேர்ந்து கொலை, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் தேடுவது தெரிந்ததும், தலைமறைவானான். ஆனாலும், மறைந்திருந்து, திட்டம்போட்டு  கொடுத்து கொலை, ஆள் கடத்தல் பணம் பறித்தலில் ஈடுபட்டு, போலீசுக்கு சவாலாக விளங்கினான்.

மணிகண்டன் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவானான். நீதிமன்றம் அவனை ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து இவனை பிடிக்க விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி,  ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, மற்றும் எஸ்ஐ பிரகாஷ், பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து அவனை தேடினர். விசாரணையில், தாதா மணிகண்டன் அண்ணாநகர் மேற்கு விரிவு பி செக்டார் 4வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் நேற்று இரவு அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதிக்கு மாறு வேடத்தில் வந்தனர். பின்னர் மணிகண்டன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தனர். அந்த குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி பியூலா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் தங்கி இருந்தான்.

இதனை அடுத்து போலீசார் வீட்டின் கதவை தட்டினர். அப்போது மணி கண்டன் கதவை திறந்து வெளியே வந்தான். வந்தது போலீஸ் என தெரிந்தவுடன் எஸ்ஐ பிரபுவை கத்தியால், மணிகண்டன் வெட்டினான். இதில் அவர் காயம் அடைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து எஸ்ஐ பிரகாஷ், மணிகண்டனை 2 முறை தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் மணிகண்டன் குண்டு காயங்களுடன் கீழே சுருண்டு விழுந்தான். தகவல் அறிந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த தாதா மணிகண்டன், எஸ்ஐ பிரபு ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த எஸ்ஐ பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமிஷனர் ஈசுவரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். இது குறித்த எஸ்ஐ பிரபு கொடுத்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் மனைவியை பிடித்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.

சென்னையில் இரண்டு ஆண்டில் 3வது என்கவுன்டர்


சென்னை ராயப்பேட்டையில் தலைமை காவலரை வெட்டிய வழக்கில் ரவுடி ஆனந்தனை 2018 ஜூலை 3ம் தேதி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனன் மற்றும் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் கோட்டூர்புரம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் செய்தனர். அதேபோல், கடந்த 2019 ஜூன் 16ம் தேதி வியாசர்பாடி ரவுடியான வல்லரசு என்பவனை இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் என்கவுண்டர் செய்தனர். தற்போது நேற்று இரவு வானூர் ரவுடியான மணிகண்டன்(எ)தாதா மணிகண்டனை(39) ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ் மற்றும் பிரிவு ஆகியோர் தலைமையிலான போலீசார் என்கவுண்டர் செய்து கொலை செய்தனர்.        

காதல் திருமணம்


தாதா மணிகண்டன் சென்னையை சேர்ந்த மருத்துவரை காதலித்து திருமணம் செய்துள்ளான். விழுப்புரம் போலீசாரின் நெருக்கடிகளால், குயிலாப்பாளையத்துக்கு அடிக்கடி வருவதில்லை. திருவண்ணாமலையில்  வீடு  கட்டி மனைவியுடன்  சில காலம் வசித்து வந்தான். மேலும் தனது எதிரியான பூபாலன் போலீசிடம் மனு கொடுத்து திருந்தி தற்போது   வாழ்ந்து வருகிறார். மற்றொரு எதிரியான ராஜ்குமார் சிறையில் இருப்பதால், சொந்த ஊரிலும், மற்றும் வேறு  இடத்திலும் எதிரிகள் இல்லாததால், தனிக்காட்டு சாம்ராஜ்யம் நடத்தினான்.  தொழிலதிபர் ஆந்திரேவை மிக கச்சிதமாக திட்டம் தீட்டி, தாதா மணிகண்டன் கொலை செய்ததை கண்டு போலீசாரே மிரண்டு போனார்கள்.

3 பேரும் காலி....

தாதா மணிகண்டன் தம்பி ஏழுமலை மீது அதிக பாசம் வைத்திருந்தான். அண்ணனின் வழியை பின்பற்றி தம்பியும் ரவுடியாக வலம் வரத்தொடங்கினார். ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு கடலூர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தான். தம்பி இறந்ததை தாங்க முடியாத மணிகண்டன், தனது கூட்டாளிகளை வைத்து, ஆரோவில், குயிலாப்பளையம் பகுதியில் கடையை அடைக்க சொல்லி கலாட்டா செய்தனர். இதனால் பயந்து போன கடைக்காரர்கள் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டனர். இதற்கு முன்பாக கடந்த 2010ம் ஆண்டு  மற்றொரு தம்பியான ஆறுமுகத்தை எதிர்தரப்பினர் பழிக்குப்பழியாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்  ஓட, ஓட வெட்டிக்கொன்றனர். கத்தியை எடுத்த அண்ணன் தம்பிகள் 3 பேரும் இன்று உயிருடன் இல்லை.

திருட்டு குற்றவாளி முதல் தாதா வரை....

குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், ஆரம்பத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோ திருட்டு என ஆரம்பித்து சிறிது, சிறிதாக வழிப்பறி, கொள்ளை என வளர்ந்து பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கடிய வகையில்  தாதா மணிகண்டனாக பரிணமித்தது அசுரத்தனமானது. 2000ம் ஆண்டிலிருந்து 2019வரை  பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறியில் என 15 வழக்குகள் மணிகண்டன் மீது  நிலுவையில் உள்ளது. இதில்  உள்ளூரிலேயே தொழில் போட்டி ஏற்பட்டு இரு பிரிவாக நின்றனர். பூபாலன் தலைமையிலான குழுவாகவும், மணிகண்டன் தலைமையிலான ஒரு குழுவும் செயல்பட்டது.

இதில்  இருதரப்புக்கும் பழிக்குப்பழி கொலைகள்  தினமும் சாதாரணமாக நடக்கும். அண்டை மாநிலமான புதுச்சேரி வரை தன்னுடைய எல்லையை மணிகண்டன் விரிவுபடுத்தியிருந்தான். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த காங்., பிரமுகர் ஜோசப், சந்திரசேகரன் கொலையில் கூட மணிகண்டன் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.  மணிகண்டனை போலீசார் பலமுறை எச்சரித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்பியாக பெரியய்யா, இருந்த போது, மாவட்டத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என உத்தரவு போட்டார். இருப்பினும் அவ்வப்போது  இப்பகுதியில் முகாமிட்டு பல்வேறு  கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்திருந்தான். விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் எங்கு கொலைகள் நடந்தாலும், அதில் தாதா மணிகண்டனின் கூட்டாளிகளுக்கான தொடர்பு,  நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருந்து வந்தது. இருமாநில போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

8 கொலை வழக்குகள்


ஆரோவில் தொழிலதிபர் ஆந்திரே படுகொலை, பொம்மையார் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் கொலை,  குயிலாப்பாளையம் பாபு, வெங்கட் ஆகிய இருவரையும் கொலை செய்தது, ஆரோவில் வாசியும், வெளிநாட்டவருமான ஷீடோ படுகொலை,  குயிலாப்பாளையம் கருணா, மணி ஆகியோரை ஒரே நேரத்தில் கொலை செய்தது உள்ளிட்ட  8 கொலை வழக்கு, திருக்கோவிலூரில் ஆசிரியரை கடத்தி பணம் பறிந்தது, கோவையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என 27 வழக்குகளும் தாதா மணிகண்டன் மீது நிலுவையில் இருந்தது.

Tags : Dada Manikandan ,encounter ,Chennai Dada Manikandan , Dada Manikandan encounter, shot dead in Chennai
× RELATED என்கவுன்ட்டரில் காயமடைந்த உதவி...