பத்திரப்பதிவுத்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியவர்களுக்கு பத்திரப்பதிவு துறையில் பணம் கொழிக்கும் பதவிகள்

* பல கோடி இழப்பு ஏற்படுத்தியவர்களை காப்பாற்றும் அதிகாரிகள்

* திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில், பல லட்சம் வாங்கிக் கொண்டு பணி மாறுதல் மற்றும் செல்வாக்கான இடங்களில் நியமித்தல், குற்றச்சாட்டுகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்வாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசு துறைகளில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனைகளும், கைதுகளும் அதிக அளவில் நடைபெறும் துறை பதிவு துறை தான். ஏனெனில் தினமும் லட்சக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பணம் புழங்கும் துறையாக இந்த துறை உள்ளது. அது தவிர ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நூற்றுக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தை சுற்றியும் இடைத்தரகர்களும் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சட்டம் படிக்காத நபர்களும் ஆவண தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஆளாகும் துறையாகி மாறியது பத்திரப்பதிவுத்துறை. இந்தப் பெயர் வருவதற்கு முக்கியக் காரணமே, இடைத்தரகர்களும், ஆவணம் தயாரிப்பதாகக் கூறி புரோக்கர்களாக இருப்பவர்கள்தான். இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கப்பெறும் புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றி வருகின்றனர். கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், பதிவுத்துறையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.

லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையில், பணம் கைப்பற்றப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர்கள் இன்னும் பதிவு பணி உள்ளிட்ட முக்கியமான பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், கையும் களவுமாக பிடிபட்டு சிறைக்குச் சென்ற சார்பதிவாளர்கள் இன்னும் அடுத்தடுத்து தொடர்ந்து முக்கியமான இடங்களில் தற்போது பணியமர்த்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு துறை தலைமை மட்டுமல்லாது அமைச்சர் அலுவலகம் பரிந்துரை செய்வதுதான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக மிக சிறிய அளவாக அரசு நிலத்தை பதிவு செய்த ராஜேஷ் என்ற சார்பதிவாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதேநேரத்தில், ஏக்கர் கணக்கில் போலி ஆவணங்களை பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சார் பதிவாளர் சிவப்பிரியா கைது செய்யப்பட்டார். பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால், பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது டிஸ்மிஸ் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்காமல், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து அவருக்கு சாதகமாக விசாரணை அறிக்கையை பெற்று அவரை பணியில் சேர்க்கும் வகையில் துறையின் அனைத்து மட்டத்திலும் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கோட்டையில் இருந்து தினமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல, ஸ்ரீதர் என்ற பதிவாளர் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமீபத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டவர். அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பதவி உயர்வு பெற்று உடனடியாக திருப்பூரில் பதிவு பணியில் சேர்ந்தார். அங்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீர் சோதனையில் ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பிடிபட்டது. ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அங்கிருந்து மாறுதல் பெற்று தற்போது சைதாப்பேட்டையில் பணியில் சேர்ந்துள்ளார். வழக்கமாக லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியவர்களை மீண்டும் பதிவு பணியில் நியமிப்பதில்லை. ஆனால் பெரிய அளவில் பணம் கைமாறப்பட்டதால்தான் இந்த மாறுதல் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதே அலுவலகத்தில் பணியில் இருக்கும் கோபிநாத் என்பவரும் இதே போன்ற மற்றொரு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டவர். அவரும் தற்போது சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் தாமு என்பவர் அமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் பணிமாறுதல் பெற்றுக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவரும் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விரைவில் வெளி வந்து விடுவார் என்று அமைச்சர் அலுவலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் சார் பதிவாளர் ஆக பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனையில் பிடிபட்டு தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அங்கு சென்று பணி ஏற்காமல் தொடர்ந்து விடுமுறையில் இருக்க அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் அவருக்கு, அரசு துறை சார்ந்த முக்கியமான அதிகாரி பரிந்துரை செய்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து முக்கியமான பணியான செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த செந்தூர்பாண்டி, பதிவுக்கு வரும் பொதுமக்களை மிரட்டியதாக புகார் எழுந்ததால், அவரது அலுவலகத்தில் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூன்று முறை திடீர் ஆய்வு மேற்கொண்டு பணத்தை கைப்பற்றினர். இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். இவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மார்த்தாண்டத்தில் மாறுதல் செய்யப்பட்டார். ஆனால் மாறுதல் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடி உத்தரவுக்கு தடை பெற்று தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இதை எதிர்த்து அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், முதலில் அவர் (1 ஏ) சார் பதிவாளராகத்தான் பணியமர்த்தப்பட்டார். பின்னர், அதிக வருமானம் வரக்கூடிய (2) சார்பதிவாளர் அலுவலகத்தில் இவரை தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்து, அங்கு பணிபுரிந்த பாலாஜி என்ற நிரந்தர சார் பதிவாளரை ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றிவிட்டனர். அதேபோல இவரது இடத்துக்கு,  கைலாசநாதர் என்பவரை தற்காலிகமாக நியமித்து பணி புரிய வைத்துள்ளனர். அதாவது செந்தூர்பாண்டி என்ற ஒருவருக்காக பல சார்பதிவாளர் களை அலைக்கழித்து இவருக்கு மட்டும் வருமானம் வரக்கூடிய இடத்தில் தற்காலிகமாக பணியமர்த்தியுள்ளனர். இதிலிருந்தே இவருக்காக அரசு இயந்திரம் அனைத்தும் முறைகேடான வழியில் இயங்குகின்றன என்பதை அறியலாம். மேலும் இவர் மீது பல குற்றச்சாட்டுகளை துறைக்கு தற்காலிகமாக தலைமை பொறுப்பை ஏற்ற ஒரு அதிகாரி விசாரணை ஏதுமின்றி மிக குறுகிய காலத்திலேயே அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்வதால் பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்ற போக்கு துறையின் அதிகாரிகள் மட்டத்தில் அடிபடுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு உட்பட்ட அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் முக்கியத்துவம் இல்லாத பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பணம் படைத்த ஒரு சில அதிகாரிகள் பிடிக்க வேண்டிய ஆட்களைப்பிடித்து முக்கியத்துவமான பதவிகளை கைப்பற்றி வருகின்றனர். இதனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவோ, சாட்சி சொல்லவோ யாரும் முன் வருவதில்லை. இதனால், இதுபோன்ற குற்றச்சாட்டு உள்ளவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ஆய்வு செய்து அத்துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்களை உடனடியாக வெகுதூரத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மாறுதல் செய்ய பதிவுத்துறை தலைவரையும், அரசு செயலரையும் தொடர்ந்து அணுக வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செய்வது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமையாக இருந்தும், அவர்களும் அவ்வாறு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

சார் பதிவாளராக பணிபுரிந்த போது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு அவர்களை பொறுப்பாக ஓய்வு பெறும் நேரத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்வது வழக்கம். இதுதான் பொதுவான விதியாகும். ஆனால் இந்த விஷயத்திலும் பணம் படைத்தவர், பணம் இல்லாதவர் என்ற பாகுபாடு காட்டப்படுவதாக துறையின் பணியாளர்கள் மத்தியில் மனக்குமுறல் எழுந்துள்ளது. இழப்புக்கு பொறுப்பாக வேண்டிய ஒரு சிலரை பொறுப்பிலிருந்து விடுவித்து ஓய்வுபெற அனுமதிப்பதும், தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் அப்படி பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குற்றச்சாட்டுகள் உள்ள பதிவுத்துறையில், நேர்மையான அதிகாரி ஜோதி நிர்மலா, இன்று ஐ.ஜியாக பணியில் சேருகிறார். அவர் சாட்டையை எடுப்பாரா? அல்லது அத்தனை குற்றச்சாட்டுகளையும் கண்டு கொள்ளாமல், கோட்டையில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருப்பாரா என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.

* லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையில், பணம்  கைப்பற்றப்பட்டும் சார் பதிவாளர்கள் முக்கியமான பணிகளில் தொடர்கின்றனர்.

* கையும் களவுமாக பிடிபட்ட சார்பதிவாளர்கள் இன்னும் அடுத்தடுத்து தொடர்ந்து முக்கியமான இடங்களில் தற்போது பணியமர்த்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories:

>