×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக புகழேந்தி தேர்வு : நேர்காணலுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி  போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில்  காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி  திமுகவுக்கும், நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் 13 பேர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர்.  விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக  அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேர்காணல்  நடத்தினார். விருப்ப மனு தாக்கல் செய்த ஒவ்வொருவரிடமும் வெற்றி வாய்ப்பு  எப்படி உள்ளது உள்பட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். 12 பேர் நேர்காணலில் கலந்து  கொண்டனர். அவர்கள் அனைவரிடமும் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

நேர்காணலுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற  21ம் தேதி நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக,  நா.புகழேந்தி போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வேட்பாளராக  அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புகழேந்தி மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து  சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ அளித்த பேட்டி:

விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி  கட்சி ஆதரவுடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது  உறுதி.. மு.க.ஸ்டாலினின் ஆற்றல்,  அவர்  நாடாளுமன்ற தேர்தலில் குவித்த  வெற்றி. இவைகள் எல்லாம் தமிழக மக்களிடத்தில்  வேரூன்றி உள்ளது. அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விக்கிரவாண்டியில் வந்து  பிரசாரத்தில் ஈடுபட இருகிகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய குடும்பம்

புகழேந்திக்கு வயது 66. இவர் விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி பெயர் கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு  புகழ் செல்வக்குமார் என்ற மகனும், செல்வி, சாந்தி, சுமதி ஆகிய மகள்களும்  உள்ளனர். 1973ல் திமுக  கிளை கழக செயலாளர், 1980-1986ல் மாவட்ட பிரதிநிதி, 1986ல் பொதுக்குழு  உறுப்பினர், 1992-1997 ஒன்றிய செயலாளர்(2 முறை). 1997ல் தலைமை செயற்குழு  உறுப்பினர், 2009ல் ஒன்றுப்பட்ட விழுப்புரம் மாவட்ட பொருளாளர்.

2015ல்  இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். 1987ம் ஆண்டு இந்தியை எதிர்த்து சட்ட நகல் எதிர்ப்பு போராட்டத்தில்  பங்கேற்று கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டவர். ராணி மேரி கல்லூரி இடிக்கக்கூடாது என  போராடிய மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பொன்முடி ஆகியோர் கைது  ெசய்யப்பட்டதை கண்டித்து மறியல் செய்து கைதாகி சிறையில் ஒரு மாதம்  இருந்தார். மேலும் திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர் ஆவார்.

Tags : Pratikandi Selection ,DMK ,constituency ,candidate ,interview ,Vikramvandi ,MK Stalin ,By-election , By-election ,DMK candidate, pugazhendhi Selection
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...