×

சேலம் நகரில் தத்தளித்த மக்கள் விடிய விடிய பெய்த மழையால் வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்

சேலம்: சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடையோடு கலந்து தண்ணீர், வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பரிதவித்தனர். கன்டெய்னர் கவிழ்ந்தும், மரங்கள் வேரோடு முறிந்தும் போக்குவரத்து பாதித்தது. தமிழகத்தில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை, விடிய விடிய நீடித்தது. சேலத்தில் காந்தி ஸ்டேடியம், அண்ணாபூங்கா, பழையபஸ்நிலையம் என்று முக்கிய இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.  

அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் பள்ளிக்கு செல்லும்  குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் சுமார் 3 மணி நேரம்  வீட்டை விட்டு வெளியே  வர முடியாமல் தவித்தனர். மாவட்டத்தின் இதர பகுதிகளில் மரங்கள் முறிந்து, மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் விடிய, விடிய மின்தடை நீடித்தது.  

ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் புகுந்தது
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு துவங்கி பலத்த மழை பெய்தது. 2 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. லெட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், கொடிமரம் அமைந்துள்ள பகுதி உட்பட கோயிலின் பல்வேறு பகுதியிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது.


Tags : flooding ,Salem ,houses , Salem city, people, rain, water
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...