×

பல்லாரி விலை உயர்வு எதிரொலி: மெதுவடை, ஆம்லெட்டில் 'முட்டைகோஸ்’....ஓட்டல்களில் புது டெக்னிக்

உடன்குடி: வீடு மற்றும் ஓட்டல்களில் சாம்பார் மற்றும் வடை, ஆம்லெட்களில் வெங்காயம் பயன்படுத்துவது வழக்கம். தற்போது வறட்சி காரணமாக பல்லாரி வெங்காயம் வரத்து குறைவு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்லாரி வெங்காயம் வரத்தும் வெகுவாக குறைந்தது. இதனால் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்லாரி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.55 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லாரி வெங்காயம் விலை உயர்வால் வீடுகளில் வெங்காயம் இல்லாத சாம்பார் மணக்கவில்லை.

வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல் ஓட்டல்களிலும் வெங்காயத்திற்கு மாற்றாக தற்காலிகமாக முட்டை கோசுக்கு மாறி வருகின்றனர். உடன்குடி பகுதியில்  கடந்த சில நாட்களாக பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.30 வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக உடன்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் சாம்பார் மற்றும் மெதுவடை, பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் தயிர் மற்றும் ஆம்லெட்களில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். முட்டைகோஸ் கிலோ ரூ.20 விற்பனை செய்யப்படுவதால்  அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பல்லாரி இல்லாத ஆம்லெட்டில் முட்டைகோஸ் பயன்படுத்தப்பட்டாலும் உணவு பிரியர்களும் வேறு வழியின்றி ருசித்து வருகின்றனர். இதுபோல் வீடுகளிலும் வெங்காயத்திற்கு மாற்றாக முட்டைகோஷ் பயன்பாடு உள்ளது.

Tags : price hike ,Pallari ,slowdown ,hotels , Pallari, price rise, 'cabbage
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி...