×

டெல்டாவில் வெளுத்து கட்டியது மழை: வெள்ளக்காடானது தஞ்சை: ரயில் நிலையத்திற்குள் வெள்ளம்.. கந்தர்வகோட்டையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது

திருச்சி: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. தஞ்சை ரயில் நிலைய வளாகத்திற்குள் மழை வெள்ளம் புகுந்தது. புதுகை மாவட்டத்திலும் கனமழை காரணமாக குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகிறது. கந்தர்வகோட்டையில் கடைகளில் வெள்ளம் புகுந்தது. வெப்ப சலனம் மற்றும் வங்க கடலில் காற்றழுத்தம் நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் ன வானிலை மையம் அறிவித்தது. அதன்படி டெல்டாவில் நேற்று பல இடங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக தஞ்சை, பட்டுக்கோட்டை, பூதலூர், நீடாமங்கலம் பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேல் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பலமாக மழை பொழிந்தது.

கரூரில் இரவு 11 மணி முதல் 2 மணி வரை லேசான மழை பெய்தது. அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்றிரவு 11 மணி முதல் 2 மணி வரை மழை பெய்தது. நாகை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் லேசான தூறல் விழுந்தது. கந்தர்வகோட்டையில் வரத்து வாரிகள், கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாராததால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பெரியகடைவீதியில் பேன்சி கடை, சலூன் கடை, மருந்து கடை, மளிகை கடை உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புதுகை மாவட்டத்தில் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.
தஞ்சையில் சாலைகளில் ஆறுபோல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே கீழ்பாலத்தில் தேங்கிய மழைநீரில் ஒரு பஸ் சிக்கியதால் அதிலிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தெற்குவீதி, கீழவீதிகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. தஞ்சை ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்தது. இதுபோல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளிலும் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது பட்டுக்கோட்டையில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் கன மழை கொட்டியது. வீடு இடிந்தது: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கலியபெருமாள் (55). மழை காரணமாக நேற்று மதியம் திடீரென கலியபெருமாள் வீட்டின் வலது பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பகுதி கலியபெருமாள் வீட்டிற்குள்ளும், மற்றொரு பகுதி பக்கத்து கூரை வீட்டில் வசித்துவரும் விவசாயி ஆறுமுகம் (65) என்பவர் வீட்டின் மீதும் விழுந்தது.

இதில் கூரை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி அஞ்சம்மாள் (48), மருமகள் சங்கீதா (27) மற்றும் அவரது மகன் பாலமுருகன் (8) ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். மேலும் மற்றொரு பகுதி சுவர் விழுந்ததில் வீட்டில் இருந்த கலியபெருமாளும் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 5 பேரும் மீட்கப்பட்டு குடவாசல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 மாடுகள் பலி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஜோதி(70) தனது பசுமாட்டின் கன்றை அருகிலுள்ள வயலில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் கன்றுகுட்டி இறந்தது. இதேபோல கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி (50) என்பவர் ஒரு காளை மற்றும் ஒரு பசு மாட்டை வயலில் மேய விட்டு, அருகே உள்ள பருத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் இரண்டு மாடுகளும் இறந்தன.

மழை அளவு:
முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மிமீ): பட்டுக்கோட்டை 112, தஞ்சை 98, திருவையாறு 18, ஒரத்தநாடு 16, பூதலூர் 34, திருவிடைமருதூர் 17, காரையூர் 141, கீரனூர் 110.80, அன்னவாசல் 60, குடுமியான்மலை 68, அரிமளம் 46, திருமயம் 78, கறம்பக்குடி 47.6, ஆலங்குடி 32.8, புதுக்கோட்டை 44, பெருங்களூர் 52, கீழாநிலை 20.

Tags : Delta ,Flooding ,railway station , Delta, rain, trench, flood
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு