×

தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் நினைவு நாள் இன்று ..!

நாடகம்... திரைப்படங்களின் முன்னோடி. ஆன்மிகம், வரலாறு, புராணம், சமகால சமூக பிரச்னைகள், சிரிப்பு என பலவிதமான சம்பவங்களை மேடையில் நிகழ்த்திக்காட்டும் நிகழ்வு. 100 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்களில் படித்த பல விஷயங்களை சிலர் மேடையில் நடித்துக் காட்டும்போது பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மாலை துவங்கி அதிகாலை வரை நாடகங்கள் நடந்த காலம் இருக்கின்றன. இன்றும் கூட கிராமங்களில் வள்ளி, திருமணம் உள்ளிட்ட நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி குறைந்த மணி நேரங்களில் நாடகத்தை நடத்தி அசத்தியவர் பம்மல் சம்பந்தம் முதலியார்.

சென்னையில் பிப்.21, 1873ல் பிறந்த இவருக்கு இன்று நினைவு நாள் (செப்.24, 1964). அந்த கால நடைமுறைப்படி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் அவரது கல்வி வாழ்க்கை துவங்கியது. பின்னர் பி.ஏ, வரலாறு, சட்டப்படிப்பு படித்து நீதிபதியாக உயர்ந்தார். ஆனால், அவரை தமிழ் சமூகம் ஒரு நாடக தந்தையாகவே பார்த்தது. 1891ல் சுகுண விலாச சபை என்ற நாடகக்குழுவை சென்னையில் துவக்கினார். தனது 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது. தொடர்ந்து மனோகரா, அமலாதித்யன் உள்ளிட்ட ஏராளமான நாடங்களை எழுதி அரங்கேற்றினார்.

அதிலும், மனோகரா நாடகம் எழுதியபோது அவரது வாழ்க்கையில் பல பிரச்னைகள் சூறாவளியாக சுழன்றடித்தன. அந்த நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரது உயிர் பிரிவதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்ற வேண்டுமென விடா முயற்சியோடு செயல்பட்டார். முதல் காட்சி எழுதியதுமே, அவரது தந்தையின் முடிவுக்காட்சியை இயற்கை அவருக்கு தந்தது. இருப்பினும், மறுநாளே 2வது காட்சியை எழுதத்தொடங்கினார். இப்படி தன்னை பாதித்த பல தருணங்களில் நாடகத்திற்கு முக்கியத்துவம் தந்தார்.

அதற்கு அவர் கூறிய வார்த்தைகள் இதுதான்... ‘என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து’ என்று. ஷேக்ஸ்பியரின் ஹேம்லட், மேக்பெத் உள்ளிட்ட பல நாடங்களை தமிழில் மொழி பெயர்த்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ெவகுவாக கவர்ந்தார். முக்கிய கதாபாத்திரங்களிலும் இடம் பெற்றார். சதி சுலோச்சனா, மனோகராவில் அவரது தனிப்பட்ட நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. அந்தக்காலங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பது வழக்கம். இதற்கும்  முன்னோடி இவரே. இவரது குழுவில் ஆண்கள் பலர் பெண் வேடமிட்டு நடித்தனர்.  இவரின் சாதனைகளை  பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1959ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி  கவுரவித்தது.

பல புத்தகங்களையும் எழுதி உள்ளார். குறிப்பாக, இந்தியனும்-ஹிட்லரும்,  இல்லறமும் துறவறமும், ஒன்பது குட்டி நாடகங்கள், கள்வர் தலைவன் உள்ளிட்ட பல  நாடகங்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. இறக்கும் வரை தனது  படைப்புச்சேவையை அவர் நிறுத்தவே இல்லை. 1964, செப்.24ல் அவரது கலை மற்றும்  வாழ்க்கைப்பயணம் முடிவடைந்தது. இன்றும் மேடை நாடகங்கள் வந்து கொண்டிருந்தாலும், காமெடி நாடகங்களையே மக்கள் அதிகம் ரசிக்கின்றனர். சிரிப்பும் வாழ்வில் அவசியம்தான். அதே நேரம் பம்மல் சம்பந்த முதலியார் கால சிந்தனையை தூண்டும் நாடகங்களும் முக்கியத்துவம் பெற வேண்டும். அவர் போற்றி வளர்த்த கலை இன்று அழிவின்பாதையில் பயணித்தாலும், இனி வரும் காலங்களிலும் நாடக்கலை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.


Tags : Tamil ,Nadu Drama ,Father Pammal Samantha Muthaliyar ,Memorial Day , Tamil Nadu Drama,Pammal Samantha Muthaliyar,Memorial Day
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு