×

குரங்கு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு கடந்த சில வாரமாக தண்ணீர் ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டியது. இதனால், அதில் குளித்து மகிழ உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்திருந்ததால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் என பலமணிநேரம் கன மழை பெய்துள்ளது. இந்த மழையால் நேற்று மதியம், குரங்கு அருவியின் மேல் பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதியில் ஆங்காங்கு தேங்கியிருந்த தண்ணீருடன் மழைநீரும் கரைபுரண்டு வர துவங்கியது.

குரங்கு அருவியில் குளித்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள், வழக்கத்தைவிட தண்ணீர் அதிகமாக கொட்டுவதையறிந்தனர். இதையடுத்து வனத்துறையினர், சுற்றுலா பயணிகளை குளிக்கும் இடத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர். சுமார் 3 மணியளவில் திடீர் என குரங்கு அருவியில் மரக்கட்டைகள், பாறைகள் உருண்டு விழுந்தது. சிறிதுநேரத்தில், செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம்போல் கட்டுக்கடங்காமல் தண்ணீர் கொட்டியது. இதையடுத்து, குரங்கு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு, அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தடையை மீறி யாரேனும் செல்கின்றார்களா என்பது குறித்து தீவிர கண்காணிப்பில், வனக்குழுவினர் ஈடுபட்டனர்.

Tags : flooding ,Monkey Falls , Monkey Falls, tourism
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!