×

ஆழ்குழாய் பழுது 20 நாட்களாக தண்ணீரின்றி தவிக்கும் புதுப்பட்டி மக்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் புதுப்பட்டியில் குடிதண்ணீர் ஆழ்குழாய் பழுதானதால் கடந்த 20 நாட்களாக பொதுமக்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் உள்ளது புதுப்பட்டி கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புதுப்பட்டியில் மேல்நிலைத்தொட்டி மூலம் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் புதுப்பட்டி ஊரணி அருகே ஆழ்குழாய் அமைத்து அதிலிருந்து சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் ஆழ்குழாய் பழுதாகிவிட்டது. இன்னும் பழுதை சரிசெய்யவில்லை. மேலும் காவிரி குடிதண்ணீரும் தற்போது குறைவாகவே வருகிறது. இதனால் வீடுகளுக்கு தேவையான குடிதண்ணீரை பெற முடியாமல் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதில் பள்ளமான பகுதியில் உள்ளவர்களுக்கு ஒருகுடம் கூட பிடிக்க முடியவில்லை.

புதுப்பட்டியில் ஊரணியின் அருகே உள்ள காவிரி குடிநீர் குழாய் ஜம்பரில் இருந்து கசியும் தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து பிடித்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த பழுதான மோட்டரை உடனடியாக சரிசெய்து குடிதண்ணீர் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். இதுகுறித்து ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த லெட்சுமணன் கூறுகையில், குடிதண்ணீர் ஆழ்குழாய் பழுதாகியுள்ளதால் கடந்த 20 நாட்களாக தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றோம். மேலும் காவிரி குடிநீர் முன்பை காட்டிலும் தற்போது குறைவாக வருகிறது. இதனால் மேடான பகுதியில் அதிகமாகவும், பள்ளத்தில் உள்ளவர்களுக்கு குறைவாகவும் தண்ணீர் கிடக்கிறது. மேலும் சில இடங்களில் பைப்பில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் எங்களுக்கு இரண்டு குடங்கள் அளவே தண்ணீர் வருகிறது. எனவே ஆழ்குழாய் பழுதை சரிசெய்து தண்ணீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து புதுப்பட்டியை சேர்ந்த ஆறாயி கூறுகையில், புதுப்பட்டி ஊரணியின் அருகே இருந்த குடிதண்ணீர் ஆழ்குழாய் 20 நாட்களுக்கு முன் பழுதாகிவிட்டது. இதனால் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றோம். மேலும் இந்த மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே இந்த ஆழ்குழாயின் அருகே புதியதாக ஒரு ஆழ்குழாய் அமைக்க வேண்டும். தற்போது தண்ணீர் பிரச்னையை சமாளிக்க காவிரி குடிநீர் தொட்டியில் கசியும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றோம் என்றார்.

Tags : Tirupputtur, Bore, Drinking Water
× RELATED கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன்...