×

விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுவார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு  வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த  சனிக்கிழமை அறிவித்தார்.அதன்படி, இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (23ம் தேதி)  முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக, திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் 22ம் தேதி(நேற்று) முதல் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட  விருப்பம் தெரிவித்து ஏராளமானோர்  சென்னை அண்ணா அறிவாலயம் வந்து விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது. நேர்காணல் முடிந்தநிலையில், திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் நா.புகழேந்தி:

விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் நா.புகழேந்தி. 65 வயதான நா.புகழேந்தி விவசாயம் செய்து வருகிறார். 1973 முதல் திமுகவில் பணியாற்றி வரும் புகழேந்தி, திமுக கிளை செயலாளர், பொதுக்குழு உறுப்பினராக  இருந்துள்ளார். அத்தியூர் திருவாதி ஊராட்சிமன்றத் தலைவர், கோலியனூர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.  தற்போது, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இந்தி சட்டநகல்  எரிப்பு போராட்டம் உட்பட திமுகவின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று புகழேந்தி சிறை சென்றுள்ளார்.


Tags : Vikravandi Assembly Elections ,MK Stalin ,candidate ,DMK ,DM Bukhandi ,election ,NDA , Vikravandi Assembly Elections: DMK candidate to contest NDA election: Party leader MK Stalin announces
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...