×

ஏர்வாடி தர்ஹாவிலுள்ள அலவாய்க்கரை குளத்தை சுத்தம் செய்ய வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

கீழக்கரை: ஏர்வாடி தர்ஹாவில் புனித நீராடும் அலவாய்க்கரை குளம் சரியான பராமரிப்பு இல்லாமல், துர்நாற்றத்துடன் உள்ளது. இந்த குளத்தை உடன் சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி மதபேதமில்லாமல் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து மகானை தரிசித்து செல்கின்றனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருகின்றவர்கள், தர்ஹாவின் பின்பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள அலவாய்க்கரை குளத்தில் மனநிலை பாதித்தவர்களை குளிக்க வைத்தால் குணமாகி விடும் என்ற நம்பிக்கையில் குளிக்க வைப்பது வழக்கம்.

இந்நிலையில் அந்த குளம் தற்போது சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக குளத்தை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அலவாய்க்கரை குளத்தை பாதுஷா நாயகம் குளம் என்றும் கூறுவார்கள். இதில் மனநிலை பாதித்தவர்களை தொடர்ந்து குளிக்க வைத்தால் மனநிலை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு தரப்பினரும் உள்ளனர். ஆனால் குளம் தற்போது அசுத்தமாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பக்தர்களின் நலனுக்காக குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Alayavaikkara Pond ,Devotees , Airwadi Darha
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி