×

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 70க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகளை படி எடுத்து தகவல் சேகரிப்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் 70க்கும் அதிக பழமை கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு, அவற்றின் தகவல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கோயிலுக்குள் பல்வேறு இடங்களிலும் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளை படி எடுத்து, இவற்றில் தெரிவித்துள்ள தகவல்களை தொகுத்து அவை கோயில் சார்பில் நூலாக வெளியிடப்படுகிறது. தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம், கல்வெட்டாளர் கனகராஜ் மற்றும் ஒரு ஆய்வாளர் என மூவர் குழு இதற்கான பணிகளை நேற்று துவக்கியது.
சாந்தலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1935-1936 மற்றும் 1942-1943 ஆகிய ஆண்டுகளில் இங்குள்ளவைகளில் 66 கல்வெட்டுகளை மட்டும் மத்திய அரசின் மைசூர் நிறுவனம் படி எடுத்தது. இதற்கென ஆங்கிலக்குறிப்புகள் மட்டுமே தரப்பட்டது. ஆனால் இதில் முழுமையான விபரங்கள் இல்லை. பல கல்வெட்டு தகவல்கள் விடுபட்டுள்ளன. 76 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கோயிலுக்குள் கண்டறியப்பட்டுள்ள, மொத்தம் 70க்கும் அதிக கல்வெட்டுகளையும் படி எடுக்கவும், அதன் தகவல்களை தொகுத்து நூலாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 மாதத்திற்குள் இப்பணி நிறைவடையும். அம்மன், சுவாமி கருவறைகளின் வெளிச்சுவர்கள் துவங்கி கோபுரப்பகுதிகள் வரையிலும் பல இடங்களில் கல்வெட்டுகள் இருக்கின்றன. நிலக்கொடை, மடங்கள் பராமரிப்பு, கொடிமரம், கோபுரம் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இக்கல்வெட்டுகள் தருகின்றன. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அம்மன் சன்னதி கம்பத்தடி மண்டபம் அருகாமைச் சுவற்றில் உள்ள நிலக்கொடைக்கான 13ம் நூற்றாண்டின் பிற்கால பாண்டியர் காலக் கல்வெட்டை படி எடுத்து பணி துவக்கியுள்ளோம்.

படி எடுத்த கல்வெட்டு ஒன்றில் இருந்த வரிகள், ‘‘திரிகோண சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான், திருஆலவாய் உடைய நாயனார் திருக்கோயிலுக்கு...’’ என துவங்குகிறது. இதன்படி மீனாட்சி கோயில் அமைந்துள்ள பகுதிக்கு திருஆலவாய் பெயருண்டு. இங்குள்ள நாயனார் என பொருள் தரும்படி தெளிவான தமிழில் இக்கல்வெட்டு இருக்கிறது. சுந்தரேஸ்வரர் போன்ற வடமொழிச்சொல் இன்றி தூய தமிழில் கல்வெட்டில் கோயில் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கல்வெட்டுகளில் 99 சதவீதம் அக்காலத்திய தமிழ் எழுத்துக்களே இடம் பிடித்துள்ளன. அப்போதைக்கு ‘தேவநகரி’ எனும் வட சொற்கள் இருந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்துவதற்கு அன்று எதிர்ப்பு இருந்திருக்கலாம். எனவே, ஓரிரு இடங்களில் வட சொற்களுக்கு பதில் ‘கிரந்தம்’ எனும் சொற்கள் இடைச்செருகலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 1190ல் கிழக்கு கோபுரத்தில் உள்ள சடையவர்மன் குலேசகரனின் கல்வெட்டு துவங்கி, 19ம் நூற்றாண்டில் மொழிகள் கற்க பல்லாயிரக்கணக்கான நாணயங்கள் வழங்கியது வரை, பல்வேறு தகவல்களை கல்வெட்டுகளால் முழுமையாக அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீனாட்சி கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறும்போது, ‘‘கல்வெட்டுகளை படி எடுத்து, அவை குறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் உரிய அனுமதியுடன் இப்பணிகள் துவங்கியுள்ளன’’ என்றார்.

படி எடுப்பது எப்படி?

தொல்லியல் குழுவினர் கல்வெட்டு பகுதியை துடைத்தெடுத்து கழுவி, மேப் லித்தோ வகை காகிதத்தை நனைத்து கல்வெட்டு மீது ஒட்டுகின்றனர். இதன்மீது ‘அடிமட்டை’ என்ற மட்டையைக் கொண்டு அடிக்க, காகிதம் கல்லோடு சேர்ந்து ஒட்டிக் கொள்ளும். அதன்மீது கருப்பு மையை மிருகத்தோலால் ஆன ‘டேப்பர்’ என்பதைக் கொண்டு தடவுகின்றனர். இந்தியன் இங்க், சிரட்டைக்கரி, பசையிலான இந்த மை பூச்சு இருக்கிறது. இதனால் எழுத்து உள்ள பகுதி வெள்ளையாகி, மற்ற இடம் கருப்பாக இருக்கும். கல்வெட்டுத் தகவல் கிடைத்து விடும். இதை மடித்து வைத்து 60 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். இதுதவிர மைதா மாவு, விபூதி தடவியும் ‘கண் படி’ என்ற முதல் வாசிப்பையும் செய்து கொள்கின்றனர். கேமராவில் கல்வெட்டு எழுத்துகளை படம் எடுத்து, கம்ப்யூட்டரில் போட்டும் எழுத்துக்களை பார்த்து தெரிந்து கொள்ளும் வழிமுறையும் பின்பற்றப்படுகிறது.

Tags : Meenakshi Amman Temple ,Madurai , Madurai, Meenakshi
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி...