×

கோவையில் 445 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

கோவை: கோவையில் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 445 கிலோ கலப்பட டீத்தூளை உணவுத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் உணவுத்துறை அதிகாரிகள் கலப்பட டீத்தூள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று போத்தனூர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் காமராஜ் கடைகளில் ஆய்வு நடத்தி வந்தார். அப்போது, டூவிலரில் வந்த ஒருவர், அப்பகுதியில் இருந்த டீ கடைக்கு டீத்தூள் சப்ளை செய்தார். அந்த டீத்தூள் பாக்கெட் ‘சில்வர் பாயில்’ கவரில் இருந்தது. கவரில், நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி உள்ளிட்டவை இல்லை. இதனை பார்த்த அலுவலர், டீத்தூள் பாக்கெட்டை பிரித்து ஆய்வு செய்தார். அப்போது, அது கலப்பட டீத்தூள் என தெரியவந்தது.

உடனடியாக அவர் கையில் இருந்த சுமார் 12 கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்தார். பின்னர், சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வனுக்கு தகவல் அளித்தார். அவரின் உத்தரவின் பேரில், விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, சப்ளை செய்தவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அவரின் வீட்டில் இருந்த 445 கிலோ அளவிலான கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது: போத்தனூரில் டீ கடைக்கு சப்ளை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் கோவை கணபதி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன்(45) என தெரியவந்தது. இவர், டீ நிறம் அதிகமாக இருக்க கலர் கலந்து, வீட்டிலேயே டீத்தூளை தயாரித்து போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட டீத்தூளை சப்ளை செய்து வந்துள்ளார்.

இவரின் வீட்டில் ஆய்வு செய்த போது 445 கிலோ கலப்பட டீத்தூள் இருந்தது. அதனை, பறிமுதல் செய்து வீட்டின் ரூமிற்கு சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும். இவர், கடைகளுக்கு ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200க்கு விற்பனை செய்து வருகிறார். டீத்தூள் விற்பனை செய்ய பயன்படுத்திய டூவிலர் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, டீத்தூள் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருப்பூரில் டூவிலரில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்து வந்த போது, அவரிடம் இருந்த டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போதும் 2வது முறையாக கலப்பட டீத்தூளை விற்பனை செய்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kowai, tea powder, confiscation
× RELATED தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி...