×

மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இளங்கலை, முதுகலை தேர்வுக்கட்டணத்தை குறைத்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர்: தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்லைக்கலைக் கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்  திடீரென்று உயர்த்தப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு ரூ.68 லிருந்து ரூ.100 ஆகவும், முதுகலை பட்டப்படிப்பில் ஒரு பாடத்திற்கு ரூ.113லிருந்து, ரூ.160 ஆகவும் உயர்த்தப்பட்டது. தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு  அரசுக்கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும்பாலும் கிராமப்புற ஏழை, மாணவ, மாணவிகளே படித்துவருகின்றனர். இந்நிலையில் தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெறக்கோரியும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர்அண்ணா  அரசுக்கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதே போல் திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக்கலைகல்லூரியில் புதியகட்டிடம் துவக்கவிழாவிற்கு கடந்த 21-ம் தேதி வருகைதந்தனர்.  அப்போது மாணவர்கள் தரப்பிலும் தேர்வுகட்டணம் குறைப்பது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சரிடம், 40 சதவீதம் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக கேள்வி  எழுப்பினர். அப்போது பதிலளித்த அமைச்சர், திருவள்ளுவர் பல்லைக்கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தேர்வுக்கட்டணம் உயர்தப்படவில்லை. தற்போது பேப்பருக்கான கட்டணம் எல்லாம் உயர்ந்துவிட்டது. இதைகருத்தில்கொண்டு  உயர்த்தப்பட்டிருக்கலாம். இருப்பினும் மாணவர்கள் உணர்வுகளை மதித்து தேர்வுக்கட்டணம் குறைப்பது தொடர்பாக வேலூர் பல்லைக்கழக பதிவாளரிடம் இரண்டு நாட்களில் ஆலோசனைநடத்தி முடிவெடுக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டணங்கள் குறைக்கப்படுவதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டணங்களை குறைக்குமாறு மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது. இதையடுத்து அரசின் ஒப்புதலுடன் தேர்வு கட்டணங்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வுக்கான இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.100 லிருந்து ரூ.90 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கான முதுகலை பட்டப்படிப்பு (எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யு, எம்.காம் ஆகியவை) ஒரு  தாளுக்கு கட்டணம் ரூ.160லிருந்து ரூ.145 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கான கட்டணம் (எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி.(சி.எஸ்) ஆகியவை) ஒரு தாளுக்கு ரூ.500லிருந்து ரூ.450 ஆக குறைக்கப்பட்டுள்ளது என  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு கட்டணம் (3 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வு கட்டணம் ரூ.175லிருந்து ரூ.150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு செய்முறை தேர்வு  கட்டணம் (6 மணி நேர செய்முறை தேர்வு) பி.எஸ்சி, எச்.சி.எம். நீங்கலாக ஒரு தேர்வுக்கு ரூ.350லிருந்து ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.சி., எச்.சி.எம். படிப்பிற்கான செய்முறை தேர்வு கட்டணம் ரூ.350லிருந்து ரூ.300 ஆக  குறைக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.பி.ஏ, எம்.எஸ்.டபிள்யு படிப்புகளுக்கான செய்முறை தேர்வு (3 மணி நேர செய்முறை தேர்வு) கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.300லிருந்து ரூ.275 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்சி. (6 மணிநேர செய்முறை தேர்வு)  படிப்புகளுக்கான செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.600லிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஏ. படிப்புகளுக்கான (3 மணி நேர செய்முறை தேர்வு) செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.400லிருந்து ரூ.350 ஆக  குறைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., இ.எம். ஆகிய படிப்பிற்கான (3 மணி நேர செய்முறை தேர்வு )செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.300லிருந்து ரூ.275 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி. அப்ளைடு மைக்ரோபயாலஜி செய்முறை தேர்வு கட்டணம் ஒரு தேர்வுக்கு ரூ.1800லிருந்து ரூ.1600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் 2019-ல் நடைபெற உள்ள தேர்வுகளுக்கு வருகிற 27-ந் தேதிக்குள் அபராதத்தொகை  இல்லாமல் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தலாம் என்றும் அக்டோபர் 1-ந் தேதி வரை அபராதத்தொகையுடன் தேர்வு கட்டணம் செலுத்தலாம். திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களை மாணவர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழக  ஆளுகைக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : master ,Thiruvalluvar University , Echoes of students' struggle: Bachelor's and Master's degree cut
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!