×

தாம்பரம், செம்பக்கம் பகுதிகளில் கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு : திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்

தாம்பரம்: தாம்பரம், செம்பாக்கம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள், பயோ மைனிங் முறையில் குப்பை குவியலை அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மாநில திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி நேற்று ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முஜிபுர் ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நடைபெறும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் நீதிபதி பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பிறகு சுற்று சூழலில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஊட்டியில் பிளாஸ்டிக் தடையை மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குப்பை தற்போது தங்கம் போன்றது, சாதாரணமாக புறக்கணிக்கும் பொருள் கிடையாது. குப்பைகளை தரம் பிரித்து அதில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

குப்பையை தரம் பிரித்து அதன் மூலம் செங்கல்கள் தயாரிக்கிறார்கள். இது மற்ற செங்கல்களை போல தரமாக உள்ளது. குப்பைகளை உரமாக்க முடியும். குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து கொடுப்பது தற்போது தமிழகத்தில் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. இவற்றை நகராட்சிகள் தொடர வேண்டும் என்பது என் வேண்டுகோள். திடக்கழிவு மேலாண்மை விதிகளில் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளது. குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வில்லையென்றால் அவர்களிடமிருந்து வாங்க கூடாது என்றும் விதி உள்ளது. மீறுபவர்களுக்கு சட்டப்படி 5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி சிறை தண்டனை கூட கொடுக்கலாம் என சட்டம் உள்ளது. இதுவரை கொடுக்கவில்லை. மக்களுக்கு இந்த அபராதம், சிறை தண்டனை கொடுக்காமலேயே குப்பைகளை முறையாக கையாளும் உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தாங்களாகவே குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும். நாம் இப்போது அனுபவிக்கின்ற இந்த இயற்கையை நம் சந்ததிக்கு கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதை செய்ய வில்லை என்றால் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டப்படி தண்டனை உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Jyotimani ,Justice ,Tambaram ,Monitoring Committee ,Sembakkam Regions ,Monitoring Committee of the Tambaram ,Sembakkam Areas , Justice Jyotimani, Chairman,Monitoring Committee ,Tambaram and Sembakkam areas
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உறுதி...