×

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனம் திவால்

* கடன் சுமையால் பரிதாபம்
* விமான சேவைகள் ரத்து
* பயணிகள் பரிதவிப்பு
* ஊழியர்கள் வேலை இழப்பு

லண்டன்: கடன் சுமை காரணமாக நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வழியில்லாததால், தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் அதனிடம் டிக்கெட் எடுத்த பயணிகள் பரிதவிக்கின்றனர். 21 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சுற்றுலா சேவை நிறுவனம் தாமஸ் குக். உலகின் மிக பழமையாக இந்த நிறுவனம், 1841ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் விமான சேவைகளில் ஈடுபட்டு வந்தது. இதன் சுற்றுலா சேவைக்காகவே தாமஸ் குக் ஏர்லைன்ஸ் நிறுவனமும் செயல்பட்டு வந்தது. 16 நாடுகளில் இதன் சேவைகள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 1.9 கோடி சுற்றுலா பயணிகள் இந்த நிறுவன வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடன் சுமை அதிகரித்து வந்ததால் நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 2017-18 நிதியாண்டில் மொத்த வருவாய் 1,200 கோடி டாலர் (சுமார் 85,200 கோடி). இதன் கடன் சுமை 170 கோடி டாலர் (சுமார் 12,070 கோடி) ஆக உள்ளது.

கடன் சுமை மட்டுமின்றி, ஆன்லைன் விமான சேவை போட்டியாளர்கள், சர்வதேச அளவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை போன்ற காரணங்களால், நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது சிரமமாக இருந்தது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்த 90 கோடி பவுண்ட் (சுமார் 7,943 கோடி) திரட்ட ஒப்புதல் பெற்றிருந்தது. ஆனால், குளிர்காலத்தில் ஓட்டல்கள் மூலம் குறைந்த வருவாயே கிடைத்ததால், மேலும் 20 கோடி பவுண்ட் (சுமார் 1,765 கோடி) தேவைப்பட்டது. ஆனால், இதை திரட்ட முடியவில்லை. எனவே, வேறு வழியின்றி, நிறுவனம் திவால் ஆனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 இதை தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 6 லட்சம் பயணிகள் வெளிநாடுகளில் தவிக்கின்றனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் தவிக்கும் சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் வாடிக்கையாளர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருக்கும் பயணிகள், இங்கிலாந்துக்கு திரும்ப வருவதற்கான விமானம் உறுதி செய்யப்படுவது குறித்து இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை விமான நிலையத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என, இங்கிலாந்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. திவால் ஆனது தொடர்பாக தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெங்க்ஹவுசர் வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்களை பல ஆண்டுகளாக ஆதரித்து வந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சப்ளையர்கள், பங்குதாரர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

இந்திய நிறுவனத்துக்கு பாதிப்பு இல்லை

தாமஸ் குக் நிறுவனம் இந்தியாவிலும் சேவை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே, கனடாவை சேர்ந்த ஃபேர்பாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 7 ஆண்டுகளாகவே இந்த நிறுவனம் தனி நிறுவனமாக இயங்கி வருகிறது. தாமஸ் குக்கின் 77 சதவீத பங்குகள் ஃபேர்பாக்சிடம் உள்ளன. திவால் ஆன இங்கிலாந்து தாமஸ் குக் நிறுவனத்துக்கு இதில் எந்த பங்கும் இல்லை. எனவே, இந்திய நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது என தாமஸ் குக் (இந்தியா) நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மாதவன் மேனன் தெரிவித்துள்ளார். இருப்பினும், திவால் அறிவிப்பு வெளியானதை அடுத்து தாமஸ் குக் (இந்தியா) நிறுவன பங்குகளின் மதிப்பு சரிந்தது.

கோவா சுற்றுலாவுக்கு இழப்பு

கோவாவுக்கு சுற்றுலாத் துறை மூலம் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு கோடை சீசனில் சுமார் 1.48 லட்சம் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு வந்து சென்றுள்ளனர். சராசரியாக அக்டோபர் - மார்ச் சுற்றுலா சீசனில், தாமஸ் குக் நிறுவனம் மூலமாக வாரத்துக்கு சுமார் 2,000 பயணிகள் கோவா வருகின்றனர். சராசரியாக ஒரு வாரம் முதல் 3 வாரம் வரை தங்குகின்றனர். கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் கோவாவுக்கு சுற்றுலா பயண சேவையை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் திவால் ஆனது கோவா சுற்றுலா துறைக்கு பெரும் இழப்பு என கோவா சுற்றுலா சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Thomas Cook Company , Thomas Cook Company, 178 years old
× RELATED ஹமாஸ் கடத்திய 4 பிணைக்கைதிகள் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 94 பேர் பலி