×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விருப்ப மனு அளித்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல்: மாலையில் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் இன்று காலை மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். மாலையில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுகிறது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில்  உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு நேற்று முன்தினம் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று ஏராளமானோர் போட்டிப் போட்டு கொண்டு விருப்ப மனுக்களை அளித்தனர்.

திமுக  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று பொன்முடி மகன் கவுதம் சிகாமணி எம்பி விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் ந.புகழேந்தி, மாவட்ட இலக்கிய  அணி தலைவர் ராஜாராமன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய ரவிதுரை, முகையூர் முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். நேர்காணல் முடிந்த  பின்னர் மாலையிலேயே திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.



Tags : Petitioners ,MK Stalin ,Interview Interview ,Voter Voluntary Volunteers ,Candidate Nomination ,interview ,Candidate , By-election, by-election, petitioners , evening
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...