×

நெல்லை அருகே முன்விரோதத்தில் பாலிடெக்னிக் மாணவன் வெட்டிக்கொலை: 7 பேருக்கு வலை

செய்துங்கநல்லூர்:   நெல்லை அடுத்த செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன். வேன் டிரைவர்.  இவரது மகன் அபிமணி என்ற திலீப் (19), தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று காலை வழக்கம்  போல் கல்லூரி வந்த அவர், மதிய உணவுக்காக 1 மணியளவில் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.  செய்துங்கநல்லூர் - சிவந்திபட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வந்தபோது 3 பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்து வழிமறித்த 7  பேர், அரிவாளுடன் அபிமணியை துரத்தினர்.
இதில்  அதிர்ச்சியடைந்த அபிமணி, பைக்கை சாலையில் போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடினார். ஆனால் 7 பேரும் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே  அபிமணி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து செய்துங்கநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் அபிமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் (43) என்பவருக்கும், அபிமணியின் தாத்தாவான  ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் காளிதாசன் என்பவருக்கும் கோயில் வரவு - செலவு கணக்கு காட்டுவதில் தகராறு ஏற்பட்டது. இதில்  காமராஜை  வெட்டியது தொடர்பாக காளிதாசன் மகன் பொன்ராஜ், அபிமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாகவே அவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இதையடுத்து காமராஜ் சகோதரர் குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Polytechnic student ,protests ,paddy field ,Student Cuts ,Paddy Polytechnic ,Foreground , foreground,paddy, Polytechnic ,student, web
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...