×

கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்து வந்து வங்கதேச தீவிரவாதியிடம் விசாரணை

* என்ஐஏ அதிகாரிகள் அதிரடி* வெடிபொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையில் வங்கதேச தீவிரவாதியை அழைத்து வந்து, தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வெடிபொருட்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில், கடந்த மாதம் 7ம் தேதி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் உல் முஜாஹிதீன்(ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் கவுசர்(எ)முனீர் (எ) ஜஹிதுல் இஸ்லாம்(39) என்பவனை, தேசிய புலனாய்வு  பிரிவினர்(என்ஐஏ) கைது செய்தனர். வங்கதேசம் ஜமால்பூர் மாவட்டம் சேகர்விக்கே கிராமத்தைச் சேர்ந்த கவுசர், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக இருந்தான். மேலும், இவன் மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில், கடந்த  2014ல் நடந்த வெடிகுண்டு வழக்கு, 2018ல் போத்கையா வெடிகுண்டு வழக்கு ஆகியவற்றில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும், கர்நாடக மாநிலம் சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு வழக்கு உள்பட மேலும் சில  வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், தீவிரவாதி கவுசர் கிருஷ்ணகிரியில் உள்ள சையத்பாஷா மலை மீது பதுங்கி இருந்து,  வெடிகுண்டுகளை தயார் செய்து சோதனைகள் நடத்தி வந்ததும், நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் எஸ்பி சி.வி.சுப்பாரெட்டி தலைமையில், கர்நாடகாவைச் சேர்ந்த 25  போலீசார், நேற்று 4 வாகனங்களில், தீவிரவாதி கவுசரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். அங்கு மலை மீது அவனை அழைத்து சென்று, எந்த இடத்தில் வைத்து வெடிகுண்டுகள் தயார் செய்தான், சோதனை செய்தான் என விசாரணை  நடத்தினர். இந்த விசாரணையில் வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, மஞ்சள், சிவப்பு நிற ஒயர்கள், தீப்பெட்டி, செல்லோடேப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி  வரை இந்த விசாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து, தீவிரவாதி கவுசரை தேசிய புலனாய்வு பிரிவினர் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.  ஏற்கனவே பெங்களூருவில் பிடிபட்ட இதே அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹபீப் உர் ரஹ்மான்  ஷேக்(28) என்பவனை, என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஜூலை 6ம் தேதி, கிருஷ்ணகிரி சையத்பாஷா மலை மீது அழைத்து சென்று  விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Krishnagiri Mountain ,Investigation Bangladeshi ,extremist , Come , Krishnagiri, hill,Bangladeshi ,extremist
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்