×

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று கோட்டை முற்றுகை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

சென்னை: தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் இன்று கோட்டையை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்துத்துறை ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கர்சன், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 46 மாதங்களாக டிஏ வழங்கவில்லை. பென்ஷன் தொகை ஒவ்வொரு மாதமும் தாமதமாக தான் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்று தான் பெற வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ ரீதியாக ஓய்வு வழங்கப்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

எங்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ அலவன்ஸ் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் இன்று (செப்டம்பர் 24) காலை 11 மணிக்கு தொடங்கும். இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : siege ,transport workers ,Fortress , Siege, retired transport workers
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்