×

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் காங்கிரசில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது

சென்னை: நாங்குநேரி தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்குவதற்கு காங்கிரசில் கடும் போட்டி நிலவியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 25ம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சேலம் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன் ஆகியோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

இதில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்எல்ஏ வேல்துரை, ஜி.கே.தாஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர். இன்றும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியை கேட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் இளைஞர் அணி பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இதில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விருப்ப மனு தாக்கல் முடிந்தவுடன் பட்டியல் டெல்லியில் உள்ள கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்படும். இதில் ஒருவரை தேர்வு செய்து கட்சி மேலிடம் வேட்பாளர் பெயரை அறிவிக்கும்.


Tags : constituency ,Nanguneri , Nonguneri constituency, by-election, Congress
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...