×

ஆவடியில் தேமுதிக கூட்டம் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்தது விதி: பிரேமலதா பேச்சு

சென்னை: அதிமுக பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததும், லாரி ஏறியதும் அவரின் விதியாகி இருக்கிறது என ஆவடியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் பிரேமலதா பேசினார். தேமுதிக சார்பில் ஆவடியில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தமிழகத்தில் எங்கும் பேனர் வைக்க கூடாது என்று சட்டம் இயற்றியவுடன், அதனை மதித்து தலைவணங்கிய  முதல் இயக்கம் தேமுதிக. இதற்கு அச்சாரமாக ஆவடி பொதுக்கூட்டம் விளங்கி வருகிறது. இங்கு ஒரு இடத்தில் கூட பேனர் வைக்கப்படவில்லை. ஒரு பேனர் கட்டுவதால், உயிர் போகிறது என்றால், அந்த பேனர் நமக்கு தேவையில்லை. சுபஸ்ரீ இறப்பு தொடர்பில், பேனர் அதிமுக உடையது என்றவுடன், அதனை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி விட்டார்கள்.

அதிமுக பேனர் காற்றில் சுபஸ்ரீ மொபட் மீது விழுவதும், அதன்பிறகு லாரி அவர் மீது ஏறுவதும் என்று விதி இருந்திருக்கிறது. மேலும், பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். இன்று காலம் மிகவும் மோசமாகிவிட்டது. நாட்டில் செயின் பறிப்பு, கொலைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. நமக்கு நல்ல சாலை, குடிநீர் வசதி, பெண்களுக்கு பாதுகாப்பு, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு ஆகியவை எல்லாம் தேவை. இவற்றையெல்லாம் எந்த ஆட்சி தருகிறதோ, அந்த ஆட்சி நமக்கு நிச்சயமாக வேண்டும். அந்த ஆட்சி ஒரு நாள் தமிழ்நாட்டில் வரும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

எனக்காக தமிழகம் ஒரு நாள் விடியும். அப்போது, எனது மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.  எனது மகன் விஜயபிரபாகரன் திருமணம் காதல் திருமணம் அல்ல. பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு தான் நடக்கும் திருமணம். அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி தொடரும். இடைத்தேர்தல் குறித்து முதல்வரும், கேப்டனும் இணைந்து பேசி முடிவெடுப்பார்கள். தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதனை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்.

மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வரும் குற்றவாளிகள்தான் பழிவாங்கும் நோக்கத்துடன் கொலைகளை நடத்தி வருகின்றனர். கொலை குற்றவாளிகளை சிறையிலிருந்து வெளியே அனுப்பும்போது நீதியரசர்கள் சரியாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தண்டனைக்குரியவர் என்றால், நீதியரசர்கள் வெளியே அனுப்பக்கூடாது. அப்படியே கொலையாளிகள் வெளியே வந்தாலும் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இவ்வாறு பிரேமலதா பேசினார்.

Tags : Subhashree ,meeting ,DMK ,The Second Crowded Escalator Avadi Banner ,Premlata Speech , Awadhi, themed meeting, the AIADMK banner, Subhasree, Premalatha
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...